இன்று தீபாவளி பண்டிகை: நகர பகுதியில் அலை மோதிய மக்கள் கூட்டம்
தீபாவளி பண்டிகையை இன்று(செவ்வாய்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. அதையொட்டி புதுவை நகர பகுதியில் உள்ள கடை வீதிகளில் நேற்று மக்கள் கூட்டம் அலை மோதியது.
புதுச்சேரி,
தீபாவளி பண்டிகை இன்று(செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க நகர பகுதிகளில் உள்ள கடைகளுக்கு தங்கள் குடும்பத்தினருடன் வந்தனர். இதனால் புதுவை அண்ணசாலை, நேருவீதி, காந்திவீதி, மிஷன்வீதி, காமராஜர் சாலை மற்றும் பல்வேறு சாலைகளில் உள்ள வணிக நிறுவனங்களில் மக்கள் கூட்டம் அலை மோதி யது. பொதுமக்கள் தங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தேவையான புத்தாடைகள், வீட்டிற்கு தேவையான பொருட்கள் மற்றும் பட்டாசுகளை வாங்கினர். இதனால் நகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது. நேற்று மதியம் 2 மணிக்கு மேல் நேரு வீதியில் 4 சக்கர வாகனங்கள் செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை.
பட்டாசுகள்
பொதுமக்கள் தங்கள் வாகனங்களை அம்பலத்தடையார் மடத்து வீதி வழியாக சென்று பழைய ஜெயில் வளாகத்தில் நிறுத்தினர். சிலர் தங்கள் வாகனங்களை அண்ணாதிடலில் நிறுத்தி வைத்திருந்தனர். இதேபோல் இனிப்பு கடைகளிலும், பட்டாசு கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதே போல் பூஜை செய்வதற்கு தேவையான பூக்களை பொதுமக்கள் நேற்று மாலை வாங்கி சென்றனர்.
சண்டே மார்க்கெட்
இதேபோல் புதுவை சண்டே மார்க்கெட்டிலும் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று திபாவளி பண்டிகைக்கு முந்தைய நாள் என்பதால் சண்டே மார்க்கெட்டில் விற்பனையும் சூடுபிடித்தது. பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை பேரம்பேசி வாங்கிச் சென்றனர்.
புதுவை நகர பகுதி முழுவதும் நேற்று போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது. இதனால் அசம்பாவித சம்பவம் எதுவும் நடைபெறாமல் இருக்க சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா உத்தரவின் பேரில் போலீஸ் சூப்பிரண்டு மாறன் தலைமையில் நகர பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் யாராவது சுற்றி திரிந்தால் அவர்களை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.
போக்குவரத்தை ஒழுங்குபடுத்த அனைத்து சாலை சந்திப்பு பகுதிகள் மற்றும் போக்குவரத்து சிக்னல்கள் அமைந்துள்ள பகுதிகளிலும் போக்குவரத்து போலீசாருக்கு உதவியாக ஐ.ஆர்.பி.என். போலீசாரும், ஊர்க்காவல் படையினரும் நிறுத்தப்பட்டு இருந்தனர். அவர்கள் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுப்பதில் போலீசாருக்கு உதவியாக செயல்பட்டனர்.
Related Tags :
Next Story