நெல், கரும்பு, சோள பயிர்களில் புதுவித பூச்சிகள் தாக்கும் அபாயம் - தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேளாண் துறை அறிவுரை


நெல், கரும்பு, சோள பயிர்களில் புதுவித பூச்சிகள் தாக்கும் அபாயம் - தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேளாண் துறை அறிவுரை
x
தினத்தந்தி 6 Nov 2018 4:15 AM IST (Updated: 6 Nov 2018 3:24 AM IST)
t-max-icont-min-icon

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் நெல், கரும்பு, சோள பயிர்களை புதுவித பூச்சிகள் தாக்கும் அபாயம் உள்ளது.

திருவண்ணாமலை,

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் நெல், கரும்பு, சோள பயிர்களை புதுவித பூச்சிகள் தாக்கும் அபாயம் உள்ளது. எனவே தடுப்பு நடவடிக்கைகளை விவசாயிகள் மேற்கொள்ள வேளாண் துறை அறிவுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக திருவண்ணாமலை வேளாண்மை இணை இயக்குனர் செல்வசேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

வடகிழக்கு பருவமழையின் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து பயிர்களிலும் பூச்சி நோய் தாக்குதலுக்கு சாதகமான சூழ்நிலை தற்பொழுது நிலவுகிறது. தமிழகத்தில் கரூர், தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களில் பயிர்களை தாக்கும் பூச்சிகள் அமெரிக்காவை தாயகமாக கொண்டதாகும்.

இந்த பூச்சிகள் மற்ற மாவட்ட பகுதிகளுக்கும் பரவும் அபாயம் உள்ளதால் அதன் தாக்குதல் தொடர்வதற்கு முன்பு வேளாண்மைத் துறை முழுவீச்சில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்த பூச்சியானது பழுப்பு நிறத்தில் காணப்படும். இறக்கையின் நுனி மற்றும் மத்திய பகுதிகளில் வெள்ளை நிறப்புள்ளிகளுடன் காணப்படும். இளம்புழுக்களின் தலைப் பகுதியில் மஞ்சள் நிறத்தில் ‘சீ’ (ஒய்) தலைகீழாக இருப்பது போன்று காணப்படும். தாய் அந்துப்பூச்சி 100 முதல் 200 முட்டைகள் கொண்ட குவியல்களை இலையின் அடிப்பகுதியில் இடுகின்றது. வெளிவரும் புழுக்கள் இலைகளை சுரண்டி உண்ணுவதால் இலைகள் பச்சையத்தை இழந்து வெண்மையாக காணப்படும்.

பாதிக்கப்பட்ட இலைகளை விரிக்கும்போது வரிசையாக துளைகள் தென்படும். இந்த பூச்சியானது மக்காச்சோளம் மட்டுமின்றி நெல், சோளம், கரும்பு, தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட 80 வகையான பயிர்களை தாக்குவதாக கண்டறியப்பட்டு உள்ளது.

எனவே விவசாயிகள் பூச்சி நோய் கண்காணிப்பினை சரிவர மேற்கொள்வது அவசியமாகும். பூச்சி நோய் தாக்குதல் அறிகுறிகள் தென்பட்டால் அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்திற்கு பாதிக்கப்பட்ட மாதிரிகளை எடுத்துச் சென்று உறுதி செய்து கொள்ள வேண்டும்.

பூச்சி தாக்குதல் அறிகுறி தென்பட்டால், வயல் வெளிகளிலேயே இலைகளின் அடிப்பரப்பில் காணப்படும் முட்டைகளை அழித்திட வேண்டும். விளக்குப் பொறிகள் மூலம் தாய் அந்துப்பூச்சி நடவடிக்கைகளை கண்காணித்து அவற்றை கவர்ந்து அழித்திட வேண்டும். 3 சதவீதம் வேப்பஎண்ணெய் கரைசல் மற்றும் 5 சதவீதம் வேப்பங்கொட்டை கரைசல் மூலம் இயற்கை முறையில் இந்த பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு வேளாண்மை துறை அலுவலர்களை விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story