திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே நிதி நிறுவன ஊழியர்களிடம் ரூ.1 கோடி கொள்ளையடித்த 5 பேர் கைது


திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே நிதி நிறுவன ஊழியர்களிடம் ரூ.1 கோடி கொள்ளையடித்த 5 பேர் கைது
x
தினத்தந்தி 6 Nov 2018 4:30 AM IST (Updated: 6 Nov 2018 3:37 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி தலைமை தபால்நிலையம் அருகே நிதி நிறுவன ஊழியர்களிடம் ரூ.1 கோடி கொள்ளையடித்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். பணத்துடன் தலைமறைவாக உள்ள மேலும் 2 பேரை தேடி வருகிறார்கள்.

திருச்சி,

திருச்சி பாலக்கரை மெயின்ரோட்டில் நிதி நிறுவனம் நடத்தி வருபவர் முருகேசன். இவருடைய நிதி நிறுவனத்தில் தஞ்சை ஒரத்தநாடு தலையாமங்கலத்தை சேர்ந்த சுந்தரேசன், மதியழகன் ஆகியோர் ஊழியர்களாக பணியாற்றி வருகிறார்கள். முருகேசன் சென்னையில் தனக்கு தெரிந்த நபரிடம் ரூ.1 கோடியை பெற்று வரும்படி ஊழியர்கள் சுந்தரேசனையும், மதியழகனையும் அனுப்பினார். அவர்கள் சென்னைக்கு சென்று அசோக்நகரில் ஒரு நபரிடம் ரூ.1 கோடியை பெற்று அந்த பணத்தை தலா ரூ.50 லட்சம் வீதம் 2 டிராவல் பேக்குகளில் வைத்து கொண்டு சென்னையில் இருந்து ஆம்னி பஸ்சில் கடந்த மாதம் 27-ந் தேதி அதிகாலை 5.20 மணிக்கு திருச்சிக்கு வந்தனர். திருச்சி தலைமை தபால்நிலையம் அருகே பஸ்சில் இருந்து 2 பேரும் இறங்கி பாலக்கரையில் உள்ள நிதிநிறுவனத்துக்கு சென்றனர்.

அப்போது அங்கு காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் சுந்தரேசன் மற்றும் மதியழகனை தாக்கி அவர்களிடம் இருந்த ரூ.1 கோடியை பறித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். முதல்கட்டமாக ஊழியர்கள் சுந்தரேசன், மதியழகன் ஆகியோரிடம் விசாரித் தனர். பின்னர் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது சென்னையில் அவர்கள் பணத்தை வாங்கி கொண்டு ஆம்னி பஸ்சில் வருவதை அறிந்த கொள்ளை கும்பல் சென்னையில் இருந்து காரில் பின்தொடர்ந்து வந்துள்ளனர்.

திருச்சி தலைமை தபால்நிலையம் அருகே 2 பேரும் பஸ்சில் இருந்து இறங்கியதும் அவர்களை தாக்கி பணத்தை பறித்து சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது வெள்ளை நிற கார் ஒன்று வேகமாக சென்றது தெரியவந்தது. அந்த காரில் பொருத்தி இருந்த வாகன பதிவு எண் போலியானது எனவும் தெரியவந்தது. இதை யடுத்து திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் அருகே உள்ள சுங்கச்சாவடியில் ஆம்னி பஸ்சை பின்தொடர்ந்து வந்த வாகனங்களை கேமராவில் போலீசார் கண்காணித்தனர். அப்போது அதே வெள்ளை நிற கார் பஸ்சுக்கு பின்னால் வந்தது கேமராவில் பதிவாகி இருந்தது.

உடனே கொள்ளையர்களை பிடிக்க போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின்பேரில், போலீஸ் துணை கமிஷனர் மயில்வாகனன் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் சென்னைக்கு சென்று அங்கு நிதி நிறுவன ஊழியர்களிடம் பணத்தை கொடுத்த நபரிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது சந்தேகப்படும் நபர்கள் சிலரின் செல்போன் எண்கள் சம்பவத்தன்று எந்த டவரில் இருந்தது என விசாரித்தனர். விசாரணையில் கடந்த மாதம் 27-ந் தேதி சென்னையை சேர்ந்த சிலரது செல்போன் டவர் திருச்சி தலைமை தபால்நிலையம் பகுதியை காட்டியது தெரியவந்தது. உடனே அந்தநபர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் திருச்சி தலைமை தபால்நிலையம் பகுதியில் கடந்த 4-ந் தேதி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக இரு மோட்டார் சைக்கிள்களில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் சென்னை மன்னடி டேவிட்சன்தெருவை சேர்ந்த அப்துல்இஸ்மாயில்(வயது 27), சென்னை பம்மல் பகுதியை சேர்ந்த முகமதுரபீக்(29) என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும் தங்களது நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து ரூ.1 கோடியை கொள்ளையடித்து சென்றதையும் ஒப்பு கொண்டனர்.

இதையடுத்து 2 பேரையும் கைது செய்து சென்னைக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில், சென்னை பிராட்வே மெயின்ரோடு பிரகாசம் சாலையை சேர்ந்த ஜாகீர்உசேன்(20), அதேபகுதியை சேர்ந்த முகமதுசமீர்(19), சென்னை எருக்கஞ்சேரியை சேர்ந்த சாகுல்அமீது(26) ஆகியோரை கைது செய்தனர். மொத்தம் 5 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.4 லட்சத்து 72 ஆயிரத்து 200-யும் 2 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர். மேலும், பணத்துடன் தலைமறைவாக உள்ள 2 பேரை தனிப்படை போலீசார் சென்னையில் முகாமிட்டு தீவிரமாக தேடி வருகிறார்கள்.

Next Story