குறித்த நேரத்துக்குமேல் பட்டாசு வெடித்தால் கடும் நடவடிக்கை - போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை


குறித்த நேரத்துக்குமேல் பட்டாசு வெடித்தால் கடும் நடவடிக்கை - போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
x
தினத்தந்தி 6 Nov 2018 4:45 AM IST (Updated: 6 Nov 2018 4:10 AM IST)
t-max-icont-min-icon

குறித்த நேரத்துக்குமேல் பட்டாசு வெடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வேலூர்,

தீபாவளி பண்டிகையின்போது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி குறித்த நேரத்துக்குமேல் பட்டாசு வெடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாடு முழுவதும் இன்று (செவ்வாய்க்கிழமை) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்து பண்டிகையை கொண்டாடுகிறார்கள். பட்டாசுகள் வெடிப்பதால் காற்று மாசு அடைவதை தடுக்க 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் எனச் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில் தீபாவளி பண்டிகையின்போது காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணிவரையிலும் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.

அரசு அறிவித்துள்ள குறித்த நேரத்தில் பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்து மகிழ வேண்டும். பொதுமக்கள் பட்டாசுகளை கவனமாக வெடிக்க வேண்டும். விபத்தில்லா மற்றும் மாசில்லா தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டும். மேலும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறி குறித்த நேரத்துக்குமேல் பட்டாசுகளை வெடித்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story