தேச விரோத சட்டத்தில் கைதான முஸ்லிம்களை விடுதலை செய்ய வேண்டும் - மனிதநேய மக்கள் கட்சி கூட்டத்தில் தீர்மானம்


தேச விரோத சட்டத்தில் கைதான முஸ்லிம்களை விடுதலை செய்ய வேண்டும் - மனிதநேய மக்கள் கட்சி கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 6 Nov 2018 4:31 AM IST (Updated: 6 Nov 2018 4:31 AM IST)
t-max-icont-min-icon

தேச விரோத தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட முஸ்லிம்களை விடுதலை செய்ய வேண்டும் என மேலப்பாளையத்தில் நடந்த மனிதநேய மக்கள் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நெல்லை,

மனிதநேய மக்கள் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்ட வக்கீல் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மேலப்பாளையத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. வக்கீல் அணி மாவட்ட செயலாளர் அல்பி நிஜாம் தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் வக்கீல் ஜெய்னுல் ஆப்தீன், மாநில செயலாளர் அப்ரார் அகமது, மாவட்ட தலைவர் கே.எஸ்.ரசூல் மைதீன், ஐகோர்ட்டு வக்கீல் ஜின்னா ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினர்.

அவர்கள், மத்திய அரசு புதிதாக அமல்படுத்தி உள்ள தேச விரோத தடுப்பு சட்டம் பற்றி விளக்கி பேசினர். அந்த சட்டத்தால் முஸ்லிம்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கினர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

தேச விரோத தடுப்பு சட்டத்தில் காரணம் இல்லாமல் அப்பாவி முஸ்லிம்களை கைது செய்யக்கூடாது. இதுவரை கைது செய்தவர்களை விடுதலை செய்ய வேண்டும். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 10 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த கைதிகள் விடுதலை செய்யப்பட்டு வருகிறார்கள்.

ஆனால் இதுவரை முஸ்லிம் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை. முஸ்லிம் கைதிகளை தமிழக அரசு கருணை உள்ளத்தோடு பாரபட்சம் இல்லாமல் விடுதலை செய்ய வேண்டும்.

இவ்வாறு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில், பகுதி தலைவர் மைதீன் நன்றி கூறினார்.

கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஜமால், துணை செயலாளர் பெஸ்ட் ரசூல், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் யூசுப் சுல்தான், பொருளாளர் ஞானியார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story