ஆர்டர் குறைந்ததால் நெருக்கடி: எதிர்பார்த்த போனஸ் கிடைக்கவில்லை - பின்னலாடை தொழிலாளர்கள் ஏமாற்றம்
திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் ஆர்டர்கள் குறைந்ததால் நெருக்கடி ஏற்பட்டது. இதனால் எதிர்பார்த்த போனஸ் கிடைக்காததால் தொழிலாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
திருப்பூர்,
தீபாவளி பண்டிகை இன்று(செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது வாடிக்கை. 8 லட்சம் தொழிலாளர்கள் பனியன் நிறுவனங்களில் பணியாற்றி வருகிறார்கள். பெரும்பாலான தொழிலாளர்களுக்கு கடந்த 3-ந் தேதி போனஸ் பட்டுவாடா செய்யப்பட்டது.
ஜி.எஸ்.டி. விதிப்பு, டியூட்டி டிராபேக் சதவீதம் குறைப்பு உள்ளிட்ட நெருக்கடியான காரணத்தால் பின்னலாடை நிறுவனங்களில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை. இருப்பினும் வருடம் முழுவதும் உழைப்பை செலுத்திய தொழிலாளர்களுக்கு போனஸ் கண்டிப்பாக கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் பின்னலாடை உரிமையாளர்கள் போனஸ் வழங்கியுள்ளனர். கடந்த ஆண்டு வழங்கிய சதவீதத்தைப்போல் இந்த ஆண்டும் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க பொதுச்செயலாளர் விஜயகுமார் கூறும்போது, பின்னலாடை தொழில் இந்த ஆண்டு கடும் நெருக்கடியில் உள்ளது. எதிர்பார்த்த ஆர்டர்கள் இல்லை. இருந்தாலும் தொழிலாளர்களுக்கு கடந்த ஆண்டைப்போல் போனஸ் கொடுக்கப்பட்டது. கடந்த 3-ந் தேதி பெரும்பாலானவர்களுக்கு போனஸ் பட்டுவாடா செய்யப்பட்டது. குறைந்தபட்சம் 1 மாத சம்பளத்தை போனசாக தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டது. அதிகபட்சமாக அந்தந்த நிறுவனங்களின் லாப சதவீத அடிப்படையை கொண்டு போனஸ் வழங்கப்பட்டது. ஒரு சில நிறுவனங்களில் ஆர்டர்கள் இருந்ததால் அந்த நிறுவனங்களில் இன்று(நேற்று) மாலை போனஸ் கொடுக்கப்பட்டது என்றார்.
பனியன் நிறுவன உரிமையாளரான அம்சா கூறும்போது, ஜி.எஸ்.டி. காரணமாக பனியன் தொழில் நெருக்கடியை சந்தித்துள்ளது. வெளிமாநிலங்களுக்கு பனியன் சரக்குகளை அனுப்பி வைத்தாலும் அதற்கான பணம் கிடைப்பதில் சுணக்கம் ஏற்பட்டது.
இதனால் ஆடை உற்பத்தி செலவுக்கு கூட பணம் கிடைக்காத நிலை உரிமையாளர்களுக்கு ஏற்பட்டது. இதுபோன்ற நெருக்கடி நிலையில் தீபாவளி பண்டிகைக்காக தொழிலாளர்களுக்கு போனஸ் கொடுக்கப்பட்டது. எதிர்பார்த்த அளவுக்கு தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கப்படவில்லை. குறிப்பாக ஜாப்ஒர்க் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. கடந்த ஆண்டு வழங்கிய சதவீத அடிப்படையில் இந்த ஆண்டும் போனஸ் பெரும்பாலான நிறுவனங்களில் கொடுக்கப்பட்டது என்றார்.
சிஸ்மா சங்க பொதுச்செயலாளர் பாபுஜி கூறும்போது, சிறு, குறு மற்றும் நடுத்தர பனியன் நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு போனஸ் பட்டுவாடா செய்யப்பட்டது. முஸ்லிம் தொழிலாளர்களுக்கு ரம்ஜானையொட்டி போனஸ் வழங்கப்படும். இந்த ஆண்டு நெருக்கடியான நிலையில் இருந்தாலும் தொழிலாளர்களுக்கு அந்தந்த நிறுவனத்தின் நிலைமைப்படி போனஸ் கொடுக்கப்பட்டது என்றார்.
ஏ.ஐ.டி.யு.சி. பனியன் சங்க பொதுச்செயலாளர் சேகர் கூறும்போது, பனியன் தொழிலில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்ற காரணத்தை கூறி பெரும்பாலான பனியன் நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு எதிர்பார்த்த போனஸ் வழங்கப்படவில்லை. தீபாவளிக்கு முந்தைய 3 நாட்களுக்கு முன்பு தான் பெரும்பாலான பனியன் நிறுவனங்களில் போனஸ் பட்டுவாடா செய்துள்ளனர். ஒரு சில பனியன் நிறுவனங்களில் பணியாற்றும் நிரந்தர ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகை முடிந்த பிறகு போனஸ் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
சில நிறுவனங்களில் கடந்த ஆண்டை விட குறைந்த தொகையை போனசாக தொழிலாளர்களின் வங்கிக்கணக்கில் போட்டுள்ளனர். இதை அந்த நிறுவனத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஏற்கவில்லை. தீபாவளி முடிந்த பின்பு பேசிக்கொள்ளலாம் என்று சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். பருவமழை பெய்துள்ளதால் சொந்த ஊர் செல்லும் வெளிமாவட்ட தொழிலாளர்களில் திருப்பூர் திரும்புபவர்களின் எண்ணிக்கை குறையும் வாய்ப்பு உள்ளது. தீபாவளி பண்டிகைக்கு முந்தையநாள் வரை போனஸ் கொடுத்துள்ளார்கள்.
இதனால் கிடைத்த போனசை பெற்று அவசர அவசரமாக ஜவுளிக்கடைக்கு சென்று ஆடைகளை வாங்கிக்கொண்டு தொழிலாளர்கள் சொந்த ஊர் சென்றார்கள். எதிர்பார்த்த அளவுக்கு போனஸ் கிடைக்காததால் தொழிலாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர் என்றார்.
Related Tags :
Next Story