வாடிப்பட்டி அருகே: கால்வாயில் தவறிவிழுந்து பலியான மூதாட்டி உடல் மீட்பு


வாடிப்பட்டி அருகே: கால்வாயில் தவறிவிழுந்து பலியான மூதாட்டி உடல் மீட்பு
x
தினத்தந்தி 6 Nov 2018 3:15 AM IST (Updated: 6 Nov 2018 4:42 AM IST)
t-max-icont-min-icon

வாடிப்பட்டி அருகே கால்வாயில் தவறிவிழுந்து பலியான மூதாட்டி உடல் மீட்டு போலீசார் விசாரணை நடத்தினர்.

வாடிப்பட்டி, 

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே போடிநாயக்கன்பட்டியில் பெரியாறு பாசன கால்வாயில் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி உடல் மிதந்து வந்தது. உடனே அங்கு குளித்துக்கொண்டிருந்தவர்கள் மூதாட்டி உடலை மீட்டு வாடிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெஜினா, சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி ஆகியோர் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த மூதாட்டி தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்த தாமரைக்குளம் கிராமத்தை சேர்ந்த கண்ணுசாமி என்பவரது தாயார் மனோரஞ்சிதம்(வயது 68) என்பது தெரியவந்தது. இவர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு தாமரைக்குளம் பகுதியில் உள்ள பெரியாறு பாசன கால்வாயில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது கால்வாயில் தவறி விழுந்துள்ளார். அதன்பிறகு அவர் வெளியே வரவில்லை. இதனால் மூதாட்டி காணாதது குறித்து அவரது பேரன் அருண்குமார் பெரியகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார். இந்தநிலையில் தான் நீரில் மூழ்கிய மனோரஞ்சிதத்தின் உடல் தாமரைக்குளத்தில் இருந்து கால்வாயில் அடித்துச் செல்லப்பட்டு போடிநாயக்கன்பட்டியில் மீட்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து வாடிப்பட்டி போலீசார் மூதாட்டி உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

Next Story