கந்துவட்டி சட்டத்தின்கீழ் தி.மு.க. பிரமுகர் உள்பட 7 பேர் மீது வழக்கு


கந்துவட்டி சட்டத்தின்கீழ் தி.மு.க. பிரமுகர் உள்பட 7 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 6 Nov 2018 3:15 AM IST (Updated: 6 Nov 2018 4:42 AM IST)
t-max-icont-min-icon

கந்து வட்டி சட்டத்தின்கீழ் தி.மு.க. பிரமுகர் வி.கே.குருசாமி உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை, 


மதுரை பழைய குயவர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ்(வயது 55). இவர் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். கனகராஜ் தனது தொழிலை விரிவுபடுத்த காமராஜர்புரத்தை சேர்ந்த தி.மு.க. முன்னாள் மண்டல தலைவர் வி.கே.குருசாமி மற்றும் அவரது உறவினர்களிடம் ரூ.58 லட்சத்தை கடனாக வாங்கியுள்ளார். அதற்காக அவர் ரூ.76 லட்சத்து 34 ஆயிரம் வரை வட்டி மட்டும் செலுத்தியுள்ளார். இதற்கிடையில் கனகராஜூக்கு வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டது.

இதனால் செபஸ்தியார் கோவில் தெருவில் தனக்கு சொந்தமான இடத்தை விற்று கடன் கொடுத்தவர்களுக்கு பணத்தை கொடுக்க முடிவு செய்தார். ஆனால் கடன் கொடுத்தவர்கள் இன்னும் மேற்கொண்டு ரூ.1 கோடியே 40 லட்சம் தர வேண்டும் என்றும், அப்படி இல்லையென்றால் அந்த இடத்தை தங்கள் பெயருக்கு எழுதி தரும்படி கூறியுள்ளனர். மேலும் அவரது வீட்டிற்கு வி.கே.குருசாமி ஆட்கள் 15 பேர் ஆயுதங்களுடன் சென்று சொத்தை எழுதி கொடுக்குமாறு கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்து கனகராஜ், போலீஸ் துணை கமிஷனரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் வி.கே.குருசாமி, உறவினர்கள் விஜயலட்சுமி, பாண்டியன், முருகன், முனியசாமி, தங்கவேலம்மாள், சடையாண்டி ஆகிய 7 பேர் மீது தெப்பக்குளம் போலீசார் கந்துவட்டி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Next Story