ஜி.பி.எஸ். கருவி மூலம் பஸ் நிறுத்தத்தை முன்கூட்டியே அறிவிக்கும் வசதி - மதுரை டவுன் பஸ்களில் அறிமுகம்


ஜி.பி.எஸ். கருவி மூலம் பஸ் நிறுத்தத்தை முன்கூட்டியே அறிவிக்கும் வசதி - மதுரை டவுன் பஸ்களில் அறிமுகம்
x
தினத்தந்தி 6 Nov 2018 3:30 AM IST (Updated: 6 Nov 2018 4:42 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் இயக்கப்படும் பஸ்களில், ஜி.பி.எஸ். கருவி மூலம் அடுத்த நிறுத்தத்தை முன்கூட்டியே அறிவிக்கும் திட்டம் மதுரை டவுன் பஸ்களில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

மதுரை, 


தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் மதுரை மண்டலத்தில் 750-க்கும் மேற்பட்ட டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில் பெரும்பாலானவை ஜவகர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத்திட்டத்தின் கீழ் தாழ்தள சொகுசு பஸ்களாக இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில் சாதாரண பஸ்களை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ஆனால், அனைத்து நிறுத்தங்களிலும் இந்த பஸ்கள் நின்று செல்கின்றன. அத்துடன் பயணிகளுக்கான கூடுதல் வசதிகள் என்பது கிடையாது. இந்தநிலையில் வெளியூர்களில் இருந்து மதுரைக்கு வரும் பயணிகளின் வசதிக்காக பஸ் நிறுத்தத்தை முன்கூட்டியே தெரிவிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக பஸ்களில் ஜி.பி.எஸ். கருவி மற்றும் எல்.இ.டி. திரை பொருத்தப்பட்டுள்ளது.

இந்த வசதி கடந்த 1-ந்தேதி முதல் திருமங்கலத்தில் இருந்து ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி, பெரியார், தபால்தந்தி நகர் ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்களிலும், மதுரை சுற்றுவட்ட பஸ்களான சி-4, 5, 7, 8 ஆகிய பஸ்களிலும் சோதனை அடிப் படையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இந்த பஸ்களில், அடுத்த நிறுத்தம் வருவதற்கு 100 மீட்டர் முன்னதாக தமிழில் அறிவிப்பு செய்யப்படும். உதாரணமாக, பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து மாட்டுத்தாவணி செல்லும் பஸ்களில், ரெயில் நிலைய நிறுத்தத்தில் இருந்து பஸ் புறப்பட்டவுடன், அடுத்த நிறுத்தம் சிம்மக்கல் என்று அறிவிக்கப்படும்.

அத்துடன் திருமங்கலத்தில் இருந்து மதுரைக்கு வரும் பஸ்களில் ஒரு நிமிடத்துக்கு ஒருமுறை “பஸ் படிக்கட்டில் நின்று பயணம் செய்ய வேண்டாம், பஸ் நின்ற பின் ஏறவும், இறங்கவும் வேண்டும். சாலையை கவனமாக கடக்க வேண்டும். சரியான சில்லறை கொண்டு வர வேண்டும்” என்பது உள்ளிட்ட எச்சரிக்கை அறிவிப்புகளும் அவ்வப்போது செய்யப்படும். இந்த திட்டம் அனைத்து டவுன் பஸ்களுக்கும் விரிவுபடுத்தப்படும். இதன்மூலம், வெளியூர் பயணிகள் சிரமமின்றி குறிப்பிட்ட நிறுத்தத்தில் இறங்க முடியும் என்று போக்குவரத்துக்கழக வர்த்தகப்பிரிவு அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

ஆனால் இந்த திட்டம் கர்நாடக அரசு டவுன் பஸ்களில் ஏற்கனவே 5 ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Next Story