கடலூரில்: பன்றி காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் பலி
கடலூர் முதுநகரில் பன்றி காய்ச்சலுக்கு மேலும் ஒரு வாலிபர் பலியான பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடலூர் முதுநகர்,
தமிழகம் முழுவதும் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்திலும் பன்றி மற்றும் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது.
இதையடுத்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இதனால் மருத்துவமனைகளில் நோயாளிகளின் கூட்டம் அலைமோதுகிறது.
இவர்களில் யாருக்காவது டெங்கு காய்ச்சல் நோய் அறிகுறி இருந்தால் அவர்களை கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள டெங்கு சிறப்பு வார்டில் அனுமதித்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். நோயாளிகளின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு நோயின் தன்மை உறுதி செய்யப்படுகிறது. அதன்படி இதுவரை 14 பேருக்கு டெங்கு காய்ச்சல் நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அதேபோல் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 8 பேர் புதுச்சேரி மற்றும் சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கடலூர் மஞ்சக்குப்பம் விவேகானந்தா அவென்யூவை சேர்ந்த வெங்கடேசன் மகன் கோபிநாதன்(வயது 29) என்ஜினீயர். பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார்.
இந்த நிலையில் கடலூரில் பன்றி காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் பலியாகி இருக்கிறார். இது பற்றிய விவரம் வருமாறு:-
கடலூர் முதுநகர் பனங்காட்டு காலனி அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் விமல்ராஜ்(வயது 33). இவர் கடந்த ஒருவாரமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் புறநோயாளியாக சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவருக்கு காய்ச்சல் குணமாகவில்லை.நேற்று முன்தினம் விமல்ராஜூக்கு திடீரென காய்ச்சல் அதிகமானதையடுத்து அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்ததோடு, அவரது ரத்த மாதிரியையும் பரிசோதனை செய்தனர். அப்போது அவருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் மதியம் இறந்தார்.
கடலூரில் பன்றி காய்ச்சலுக்கு 2 பேர் பலியாகி இருக்கும் சம்பவத்தையடுத்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறையினர் மேற்கொண்டு வருகிறார் கள். கடலூர் நகர் நல அலுவலர் அரவிந்த்ஜோதி தலைமையில் துப்புரவு பணியாளர்கள் பனங்காட்டு காலனிக்கு விரைந்து சென்றனர். அந்த பகுதியில் உள்ள குப்பைகள் மற்றும் கழிவுநீரை அகற்றுதல், பிளச்சிங் பவுடர் தூவுதல் போன்ற பணிகளை மேற்கொண்டனர்.
Related Tags :
Next Story