சாராயம் கடத்தும் கும்பலை பிடிக்க சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார் ஏற்றி கொலை
சந்திராப்பூரில் சாராயம் கடத்தும் கும்பலை பிடிக்க சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார் ஏற்றி கொல்லப்பட்டார்.
நாக்பூர்,
சந்திராப்பூரில் சாராயம் கடத்தும் கும்பலை பிடிக்க சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார் ஏற்றி கொல்லப்பட்டார்.
சாராயம் கடத்தல்
மராட்டியத்தில் சந்திராப்பூர், வார்தா, கட்சிரோலி ஆகிய மாவட்டங்களில் மதுவிலக்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் சந்திராப்பூரில் உள்ள நாக்பீட் பகுதியில் சாராயம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் பேரில் நேற்று காலை 8.30 மணியளவில் சாராயம் கடத்தும் கும்பலை பிடிப்பதற்காக நாக்பீட் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சத்ரபதி ஷிட்டே உள்பட 5 போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர்.
அப்போது, அந்த வழியாக சந்தேகத்திற்கிடமாக கார் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. இதை கவனித்த போலீசார் நடுரோட்டில் நின்று அந்த காரை வழிமறித்தனர்.
கார் ஏற்றி கொலை
இதை பார்த்ததும் கார் டிரைவர் திடீரென காரை பின்பக்கமாக திருப்பி வேகமாக எடுத்தார். அப்போது, காரை மடக்க முயன்ற சப்-இன்ஸ்பெக்டர் சத்ரபதி ஷிட்டே மீது டிரைவர் காரை ஏற்றினார். இதில் அவர் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்தார். உடனே டிரைவர் காரை நிறுத்தாமல் அங்கிருந்து வேகமாக தப்பிச் சென்று விட்டார். இதை பார்த்து மற்ற போலீசார் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து சப்-இன்ஸ்பெக்டரை கார் ஏற்றி கொன்றவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
சாராயம் கடத்தும் கும்பலை பிடிக்க சென்ற போலீஸ் அதிகாரி கார் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story