வெள்ளகோவிலில் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை


வெள்ளகோவிலில் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 8 Nov 2018 4:15 AM IST (Updated: 7 Nov 2018 10:53 PM IST)
t-max-icont-min-icon

வெள்ளகோவிலில் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

வெள்ளகோவில்,

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- திருப்பூரை அடுத்த வெள்ளகோவில் சேனாபதிபாளையம் ஸ்ரீராம் நகரைச்சேர்ந்தவர் நல்லதம்பி (வயது 50)கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சாந்தி (43). இவர்களுடைய மகள் கனிமொழி (19). கனிமொழி கரூர் மாவட்டம் பரமத்தியிலுள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இவருக்கு சிறுவயதில் இருந்தே சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்பட்டு, அதற்காக தொடர்ந்து காங்கேயம் அரசு மருத்துவமனையில் ஊசி போட்டு வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 10-ந்தேதி திடீரென மயங்கி விழுந்த அவரை, வெள்ளகோவில் செம்மாண்டம்பாளையம் பிரிவு அருகிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் அங்கிருந்து ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் கனிமொழி விஷம் குடித்து இருப்பதாக கூறியுள்ளனர். தொடர்ந்து சேலம் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவர் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு 3 வாரங்களாக சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போனதால் மனமுடைந்து விஷம் குடித்து விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கனிமொழியின் தாய் கொடுத்த புகாரின் பேரில், வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மு.ஜெயபாலன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story