உடன்குடி அருகே மோட்டார் சைக்கிள்கள் மீது கார் மோதல்; தொழிலாளி சாவு மாணவர் உள்பட 2 பேர் படுகாயம்
உடன்குடி அருகே மோட்டார் சைக்கிள்கள் மீது கார் மோதியதில் தொழிலாளி பலியானார். மாணவர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
உடன்குடி,
உடன்குடி அருகே மோட்டார் சைக்கிள்கள் மீது கார் மோதியதில் தொழிலாளி பலியானார். மாணவர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
சமையல் தொழிலாளி
உடன்குடி முருகன் காலனியைச் சேர்ந்தவர் காங்கேயன் (வயது 56) சமையல் தொழிலாளி. உடன்குடி சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் சேகர். இவருடைய மகன் முத்து செல்வன் (15), உடன்குடியில் உள்ள பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பு படித்து வருகிறான். இவன் விடுமுறை நாட்களில் காங்கேயனுடன் சேர்ந்து சமையல் வேலைக்கு செல்வது வழக்கம்.
நேற்று முன்தினம் காலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, காங்கேயன், முத்து செல்வன் ஆகிய 2 பேரும் உடன்குடி அருகே கொட்டங்காட்டில் உள்ள ஒரு வீட்டில் சென்று, பலகாரம் செய்து கொடுத்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் அங்கிருந்து ஒரு மோட்டார் சைக்கிளில் தங்களது வீடுகளுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை காங்கேயன் ஓட்டிச் சென்றார்.
கார் மோதல்
அந்த மோட்டார் சைக்கிளை பின்தொடர்ந்து, படுக்கப்பத்தைச் சேர்ந்த சிவராம சேகர் மகன் தங்கத்துரை (36) மற்றொரு மோட்டார் சைக்கிளில் உடன்குடிக்கு சென்று கொண்டிருந்தார். கொட்டங்காடு அருகில் சென்றபோது, எதிரே வந்த கார் எதிர்பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிள்களின் மீதும் அடுத்தடுத்து மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த காங்கேயன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
படுகாயம் அடைந்த முத்து செல்வன், தங்கத்துரை ஆகிய 2 பேரும் உயிருக்கு போராடியவாறு கிடந்தனர். உடனே அவர்கள் 2 பேருக்கும் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
டிரைவர் கைது
இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாத்துரை வழக்குப்பதிவு செய்து, காரை ஓட்டி வந்த தட்டார்மடம் அருகே இடைச்சிவிளையைச் சேர்ந்த ஆதிலிங்கம் மகன் முருகனை (24) கைது செய்தார். விபத்தில் இறந்த காங்கேயனுக்கு மகராசி என்ற மனைவியும், 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.
Related Tags :
Next Story