வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை: தூத்துக்குடியில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தூத்துக்குடியில் மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லவில்லை.
தூத்துக்குடி,
வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தூத்துக்குடியில் மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லவில்லை.
சாரல் மழை
வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக லேசான மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் ஒரு சில இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது. நேற்று முழுவதும் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மீன்பிடி படகுகள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி தூத்துக்குடியில் இருந்து விசைப்படகுகள், நாட்டுப்படகுகளில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லவில்லை.
அதே நேரத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) வங்கக்கடலில் மேலும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக இருப்பதாகவும், இதனால் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதனால் வருகிற 11-ந் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதாக மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மழை விவரம்
நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை மாவட்டம் முழுவதும் பெய்த மழை விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-
திருச்செந்தூர் -10, குலசேகரன்பட்டினம்- 7, காயல்பட்டினம்- 8, விளாத்திகுளம்- 1, வைப்பார்- 2, சூரங்குடி- 7, கோவில்பட்டி- 1, கயத்தாறு- 3, கடம்பூர்- 4, வேடநத்தம்- 2, எட்டயபுரம்- 2, சாத்தான்குளம்- 7, தூத்துக்குடி- 5.2.
Related Tags :
Next Story