செட்டாப் பாக்சுக்கு கட்டணம் வசூலித்தால் உரிமம் ரத்து அமைச்சர் எச்சரிக்கை


செட்டாப் பாக்சுக்கு கட்டணம் வசூலித்தால் உரிமம் ரத்து அமைச்சர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 7 Nov 2018 10:00 PM GMT (Updated: 7 Nov 2018 7:00 PM GMT)

செட்டாப் பாக்ஸ்களுக்கு இயக்க கட்டணம் தவிர பிற கட்டணங்கள் வசூலித்தால் கேபிள் ஆபரேட்டர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று ராமநாதபுரத்தில் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் எச்சரித்தார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் சார்பாக கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கு எச்.டி. எனப்படும் உயர் வரையறை செட்டாப் பாக்ஸ்கள் வழங்கும் விழா கலெக்டர் வீரராகவ ராவ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அதிகாரி முத்துமாரி முன்னிலை வகித்தார்.

விழாவில், கேபிள் ஆபரேட்டர்களுக்கு உயர்வரையறை செட்டாப் பாக்ஸ்களையும், பல்வேறு அரசு நலத்திட்டங்களின் கீழ் 224 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 67 லட்சம் மதிப்பிலான நலத்திட்டம் மற்றும் கடன் உதவிகளை வழங்கி அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பேசியதாவது:- மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதிப்படி தமிழகத்தில் அரசு கேபிள் டி.வி. நடத்தப்பட்டு வருகிறது.

இதற்காக மத்திய அரசு கடந்த 17.4.2017 அன்று டிஜிட்டல் உரிமம் வழங்கியது. தமிழகத்தில் தற்போது 26,823 கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள்் மூலம் 65 லட்சத்து 24 ஆயிரத்து 116 சந்தாதாரர்கள் உள்ளனர். அவற்றில் இதுவரை, 16,549 கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள்் மூலம் 30 லட்சம் எண்ணிக்கையில் எச்.டி. செட்டாப் பாக்ஸ்களும், 12,000 எச்.டி எனப்படும் உயர்வரையறை செட்டாப் பாக்ஸ்களும் கேபிள் டிவி சந்தாதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் மொத்தம் 420 உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்களும், 1 லட்சத்து 353 கேபிள் டி.வி. சந்தாதாரர்களும் உள்ளனர். இந்த செட்டாப் பாக்ஸ்கள் மூலம் பொதுமக்களுக்கு ரூ.125 மற்றும் ஜி.எஸ்.டி வரிகளுடன் 180 சேனல்களும், ரூ.175 மற்றும் ஜி.எஸ்.டி வரிகளுடன் 230 சேனல்களும் என இரண்டு தொகுப்புகளாக சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இத்தகைய செட்டாப் பாக்ஸ்கள் மூலம், அரசுக்கு மாதத்திற்கு ரூ.42 லட்சத்து 43 ஆயிரம் வருவாய் கிடைக்கிறது. மேலும் தற்போது, மாவட்டத்தில் 2,000 உயர்வரையறை எச்.டி. செட்டாப் பாக்ஸ்கள் வந்துள்ளன. இந்த சேவையை பெற விரும்பும் சந்தாதாரர்களுக்கு ரூ.500-க்கு உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் வாயிலாக இணைப்பு வழங்கப்பட உள்ளது.

இந்த செட்டாப் பாக்ஸ்கள் மூலம் தற்போது வழங்கப்பட்டு வரும் 2 தொகுப்பு சேவைகளோடு ரூ.225 மற்றும் ஜி.எஸ்.டி வரிகளுடன் 380 எச்.டி. சேனல்களுடன், 45 எச்.டி சேனல்கள் என மொத்தம் 425 சேனல்களை காணமுடியும். இயக்க கட்டணமாக ரூ.200 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. சில பகுதிகளில் செட்டாப் பாக்ஸ்களை வழங்க பொதுமக்களிடம் இருந்து கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பணம் வசூலிப்பதாக புகார் வருகின்றன. அதுகுறித்து தகவல் தெரிவித்தால் உரிமம் ரத்து செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் சுமன், வேளாண் இணை இயக்குனர் சுசீலா, விவசாய நேர்முக உதவியாளர் சேக் அப்துல்லா, மாவட்ட ஆதிதிராவிட அலுவலர் சுஜி பிரமிளா, கேபிள் டி.வி. தாசில்தார் செய்யது முகமது உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story