அ.தி.மு.க. வேட்பாளர்களை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வோம் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேச்சு
விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் தொகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வோம் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
விளாத்திகுளம்,
விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் தொகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வோம் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
ஆலோசனை கூட்டம்
விளாத்திகுளம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் வாக்குச்சாவடி முகவர்களை நியமிப்பது குறித்த ஆலோசனை கூட்டம், விளாத்திகுளம் அருகே புதூர் யூனியன் சிவலார்பட்டி சமுதாய நலக்கூடத்தில் நேற்று நடந்தது.
விளாத்திகுளம் தொகுதி தேர்தல் பொறுப்பாளரும், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருமான கடம்பூர் ராஜூ தலைமை தாங்கினார்.
ஓட்டப்பிடாரம் தொகுதி தேர்தல் பொறுப்பாளரும், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சருமான ராஜலட்சுமி, மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன், நெல்லை, தூத்துக்குடி மாவட்ட ஆவின் தலைவர் என்.சின்னத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியதாவது:-
ஒரு லட்சம் வாக்குகள்...
தமிழகத்தில் 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலானது பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக வரலாம். அல்லது பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து நடைபெறலாம். எப்போது தேர்தல் நடந்தாலும் தயாராக இருக்கும் வகையில், அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஒவ்வொரு தொகுதியிலும் வார்டுவாரியாக வாக்குச்சாவடி முகவர்களை நியமிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கிய நாளில் இருந்து நடைபெற்ற 10 தேர்தல்களில் 8 முறை விளாத்திகுளம் தொகுதியிலும், 7 முறை ஓட்டப்பிடாரம் தொகுதியிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்த தொகுதிகள் அ.தி.மு.க.வின் கோட்டைகள் என்பதை பலமுறை நிரூபித்து உள்ளோம். இந்த தொகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஒரு லட்சத்துக்கு அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
சாமி தரிசனம்
கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் குளத்தூர் தனியார் மண்டபத்தில் அ.தி.மு.க. சார்பில் வாக்குச்சாவடி முகவர்களை நியமிப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. முன்னதாக எட்டயபுரம் அருகே சிந்தலக்கரை காளிபராசக்தி தவசித்தர் பீடத்தில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ராஜலட்சுமி மற்றும் கட்சி நிர்வாகிகள் சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story