ஆழ்வார்குறிச்சி அருகே இறந்தவரின் உடலை வைத்து ரெயில் தண்டவாளத்தில் போராட்டம் நடத்த முயற்சி


ஆழ்வார்குறிச்சி அருகே இறந்தவரின் உடலை வைத்து ரெயில் தண்டவாளத்தில் போராட்டம் நடத்த முயற்சி
x
தினத்தந்தி 8 Nov 2018 3:30 AM IST (Updated: 8 Nov 2018 12:42 AM IST)
t-max-icont-min-icon

ஆழ்வார்குறிச்சி அருகே பொதுமக்கள், இறந்தவரின் உடலை தண்டவாளத்தில் வைத்து போராட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடையம்,

ஆழ்வார்குறிச்சி அருகே பொதுமக்கள், இறந்தவரின் உடலை தண்டவாளத்தில் வைத்து போராட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ரெயில்வே பணிகள்

ஆழ்வார்குறிச்சியில் இருந்து ஆம்பூர் செல்லும் ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள பரம்பு பகுதியில் ஆளில்லா ரெயில்வே கிராசிங்கை மூடிவிட்டு, அங்கு சுரங்க பாதை பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணி தொடங்கி ஓராண்டு ஆகியும் பணிகள் முடிவடையாததால் மழை காலங்களில் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் மறுபகுதிக்கு கடந்து செல்ல பாதையின்றி மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

போராட்டம் நடத்த முயற்சி

இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த பகுதியில் உள்ள வேம்படி தெருவை சேர்ந்த புஷ்பம்மாள் இறந்தார். அவரின் உடலை அந்த பாதை வழியாக கொண்டு செல்ல முடியாமல் கைகளில் சுமந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஊர் பொதுமக்கள் புஷ்பம்மாள் உடலை ரெயில் தண்டவாளத்தில் வைத்து போராட்டம் நடத்த முயற்சி செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆழ்வார்குறிச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சமாதானம் அடைந்த கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு விட்டு இறந்தவரின் உடலை எடுத்து சென்றனர்.

இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story