திருக்கோவிலூர் அருகே: பணத்தகராறில் விவசாயி அடித்துக் கொலை - மாமனார், மருமகனுக்கு போலீஸ் வலைவீச்சு
திருக்கோவிலூர் அருகே பணத்தகராறில் விவசாயியை அடித்துக் கொலை செய்த மாமனார், மருமகனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அருகே உள்ள எடையூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்(வயது 45). விவசாயி. இவருடைய நிலத்தில் அதே ஊரைச்சேர்ந்த மேகவர்ணன்(45) என்பவர் டிராக்டர் மூலம் உழுதார். இந்த வகையில் ஆறுமுகம், மேகவர்ணனுக்கு கடனாக ரூ.300 கொடுக்க வேண்டியது இருந்தது.
இதனை நேற்று மதியம் மேகவர்ணன், தனது மருமகன் ராமதாசுடன் நேரில் சென்று கேட்டார். அப்போது ஆறுமுகத்திற்கும், மேகவர்ணனுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மேகவர்ணன், ராமதாஸ் ஆகியோர் அங்கு கிடந்த தடி மற்றும் இரும்பு கம்பியால் ஆறுமுகத்தை தாக்கி னர். இதில் ஆறுமுகம் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். உடனே 2 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.
இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ், இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி, சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள மேகவர்ணன், ராமதாஸ் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story