போக்குவரத்திற்கு இடையூறாக பட்டாசு வெடித்தவர்களை விரட்டியடித்த போலீசார் மீது கல்வீச்சு 3 பேர் கைது


போக்குவரத்திற்கு இடையூறாக பட்டாசு வெடித்தவர்களை விரட்டியடித்த போலீசார் மீது கல்வீச்சு 3 பேர் கைது
x
தினத்தந்தி 7 Nov 2018 10:15 PM GMT (Updated: 7 Nov 2018 8:26 PM GMT)

லாலாபேட்டை அருகே போக்குவரத்திற்கு இடையூறாக பட்டாசு வெடித்தவர்களை விரட்டியடித்த போலீசார் மீது கல் வீசப்பட்டது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

லாலாபேட்டை,

தீபாவளி பண்டிகையின்போது அதிகளவு பட்டாசு வெடிக்கப்படுவதால் காற்று மாசுபடுவதாகவும், பொதுமக்களுக்கு மூச்சு திணறல், நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதாவும் ஆகவே, பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும் என்று கோர்ட்டில் சமூக ஆர்வலர்கள் வழக்கு தொடர்ந்தனர். அதற்கு கோர்ட்டு, பட்டாசு வெடிக்க தடை விதிக்க முடியாது, 2 மணி நேரம் மட்டும் வெடிக்க அனுமதி அளித்து தீர்ப்பு கூறியது. அதன்படி தமிழகத்தில் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் என 2 மணி நேரம் ஒதுக்கப்பட்டது. அந்த நேரத்தை மீறி பட்டாசு வெடிப்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யவும் போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், லாலாபேட்டையை அடுத்துள்ள பிள்ளபாளையத்தில் நேற்று முன்தினம் சிலர் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக பட்டாசு வெடித்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், லாலாபேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகுமான் மற்றும் போலீசார் ரோந்து வாகனம் மூலம் அங்கு விரைந்து சென்று பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பட்டாசு வெடித்து கொண்டிருந்த நபர்களை விரட்டி அடித்தனர்.

போலீசில் மாட்டிக்கொண்டால் கைது செய்து விடுவார்கள் என பயந்து பட்டாசு வெடித்தவர்கள் ஊருக்குள் தப்பி ஓடினர். அப்போது குடிபோதையில் அங்கு வந்த சிலர், போலீசார் மீது சரமாரியாக கற்களை வீசினர். இதில் போலீஸ்காரர் ரமேஷ்குமார், போலீஸ் நண்பர்கள் குழுவை சேர்ந்த முத்துக்குமார் ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிள்ளபாளையத்தை சேர்ந்த பொக்லைன் டிரைவர் கோகுல் (வயது 23), அதே ஊரை சேர்ந்த தினகரன்(26), வீரவல்லியை சேர்ந்த ரமேஷ் (25) ஆகிய 3 பேரை கைது செய்தனர். திவாகர் என்பவரை தேடி வருகின்றனர். போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவு பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக நடந்த சம்பவத்தின் உண்மை நிலையை பிள்ளபாளையத்திலுள்ள ஊர் முக்கிய பிரமுகர்களை அழைத்து போலீசார் எடுத்துக் கூறினர்.

Next Story