தொட்டியம் அருகே வாலிபர் அடித்துக் கொலை; ஒருவர் கைது


தொட்டியம் அருகே வாலிபர் அடித்துக் கொலை; ஒருவர் கைது
x
தினத்தந்தி 8 Nov 2018 4:30 AM IST (Updated: 8 Nov 2018 2:04 AM IST)
t-max-icont-min-icon

தொட்டியம் அருகே வாலிபரை அடித்துக்கொன்ற ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

தொட்டியம்,

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள அரசலூர் கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன். இவரது மகன் விமல்ராஜ் (வயது 23), இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த விஜயராகவன் (35) என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டு, அது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் தீபாவளியன்று இரவு விமல்ராஜ் மது குடித்துவிட்டு விஜயராகவன் வீட்டிற்கு சென்றார். அப்போது அங்கு இருந்த விஜயராகவன், அவரது தாய் வளர்மதி என்ற கண்ணபாப்பா (58) மற்றும் சகோதரர் வசந்தகுமார் (38) ஆகியோரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனை தட்டி கேட்ட மூன்று பேரிடம் விமல்ராஜ் தகராறு செய்து தாக்க முயன்றார்.

இதனால் ஆத்திரமடைந்த கண்ணபாப்பா, வசந்தகுமார் உள்ளிட்ட மூன்று பேரும் சேர்ந்து விமல்ராஜை கம்பி, உருட்டு கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கினர். இதில் படுகாயமடைந்த விமல்ராஜ் நிலைகுலைந்து மயங்கி கீழே விழுந்தார். இதனையடுத்து மூன்று பேரும் அங்கிருந்து ஓடிவிட்டனர். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் மயங்கி கிடந்த விமல்ராஜை மீட்டு சிகிச்சைக்காக தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இது குறித்து விமல்ராஜ் சகோதரர் நூர்வசந்த் (22) கொடுத்த புகாரின் பேரில் தொட்டியம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விஜயராகவனை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்றவர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

Next Story