பட்டாசு கடை-குடோனில் தீ விபத்து ரூ.2 லட்சம் பொருட்கள் நாசம்


பட்டாசு கடை-குடோனில் தீ விபத்து ரூ.2 லட்சம் பொருட்கள் நாசம்
x
தினத்தந்தி 8 Nov 2018 4:45 AM IST (Updated: 8 Nov 2018 2:07 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் பட்டாசு கடை மற்றும் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.2 லட்சம் பொருட்கள் நாசமடைந்தன.

திருச்சி,

திருச்சி உறையூர் நாச்சியார்கோவில் மேலதெருவை சேர்ந்தவர் குமாரராஜா(வயது 53). இவர் உறையூர் வாலாஜாரோட்டில் பெயிண்ட் கடை நடத்தி வருகிறார். தீபாவளி பண்டிகையையொட்டி உரிமம் பெற்று பட்டாசு கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் அதிகாலை 4 மணி அளவில் இவரது பட்டாசு கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மள,மளவென பரவியதால் அங்கிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின.

இந்த தீ விபத்தில் கடையில் இருந்த இரும்பு மற்றும் மரச்சாமான்கள் தீக்கிரையாகின. தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் வாகனத்தில் அங்கு சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தினர். தீ விபத்தில் ரூ.1 லட்சத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் எரிந்து நாசமாகின. இந்த சம்பவம் குறித்து உறையூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருச்சி வயலூர்ரோடு குமரன்நகரை சேர்ந்தவர் ராஜசேகர்(35). இவர் கீழவண்ணாரப்பேட்டை பகுதியில் பழைய பேப்பர் மற்றும் இரும்பு பொருட்கள் குடோன் வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் பகல் இவரது குடோனில் திடீரென தீப்பிடித்தது. தீ வேகமாக பரவியதால் அங்கிருந்த பேப்பர் கட்டுகள், பழைய பொருட்கள் ஆகியவை எரிந்தது. தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் வாகனங்களில் அங்கு சென்று தீயை அணைக்க முயற்சித்தனர்.

ஆனாலும் தீயை கட்டுப்படுத்த முடியாததால் மேலும் 3 வாகனங்களில் வந்து தீயை அணைத்தனர். தீ விபத்தில் ரூ.1 லட்சம் பொருட்கள் எரிந்து நாசமாகின. இது குறித்து அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து, பட்டாசு வெடித்ததில் தீப்பொறி விழுந்ததால் தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது மின் கசிவு காரணமா? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தீபாவளி பண்டிகையான நேற்று முன்தினம் திருச்சி மாநகர் பகுதியில் பட்டாசு கடை, குடோன் உள்பட மொத்தம் 5 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story