தீபாவளி ஆர்டர்களை தைத்து கொடுக்க முடியாததால் பெண் தையல் தொழிலாளி தற்கொலை


தீபாவளி ஆர்டர்களை தைத்து கொடுக்க முடியாததால் பெண் தையல் தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 8 Nov 2018 4:15 AM IST (Updated: 8 Nov 2018 2:09 AM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகையை யொட்டி வாடிக்கையாளர்களின் ஆர்டர்களை தைத்து கொடுக்க முடியாததால் பெண் தையல் தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.

திருப்பூர்,

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்தவர் பத்மினி (வயது 41). தையல் தொழிலாளி. இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை பிரிந்து, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூர் பாப்பண்ணா நகருக்கு வந்தார். அங்கு தனது தாய் அம்பிகா மற்றும் ஒரு மகள், மகனுடன் வசித்து வந்தார்.

திருப்பூருக்கு வந்த பத்மினிக்கு தையல் தொழில் தெரிந்ததால், சொந்தமாக தையல் கடை தொடங்கினார். பத்மினி தைத்து கொடுக்கும் ஆடைகள் அனைவருக்கும் பிடித்ததால், நாளுக்கு நாள் அவருக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. அதிகளவு ஆர்டர்களும் வந்து கொண்டிருந்தன.

இந்த நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி பத்மினிக்கு ஏராளமான ஆர்டர்கள் வந்திருந்தன. அவர் முடிந்த அளவில் ஆர்டர்களை தைத்து கொடுத்தார். ஆனால் சிலருக்கு ஆடைகளை தைத்து கொடுக்க முடியாமல் போனதாக தெரிகிறது. அவர்கள் தையல் கடைக்கு சென்று, பத்மினியிடம் ஆடைகளை தைத்து கொடுக்குமாறு கேட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆர்டர்களை முடித்து கொடுக்க முடியாமல் போனதாலும், தனது நற்பெயர் பாதித்ததாலும் மனமுடைந்த பத்மினி சாணிபவுடர் (விஷம்) குடித்து நேற்று முன்தினம் தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பத்மினி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story