சொந்த ஊர்களுக்கு தொழிலாளர்கள் சென்றதால் வெறிச்சோடிய திருப்பூர் மாநகரம்


சொந்த ஊர்களுக்கு தொழிலாளர்கள் சென்றதால் வெறிச்சோடிய திருப்பூர் மாநகரம்
x
தினத்தந்தி 7 Nov 2018 11:00 PM GMT (Updated: 7 Nov 2018 8:46 PM GMT)

தீபாவளி பண்டிகையை கொண்டாட பின்னலாடை தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றதால் திருப்பூர் மாநகரம் வெறிச்சோடி காணப்படுகிறது.

திருப்பூர்,

திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.

இதனால் திருப்பூரில் எப்போதும் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். ஒரு இடத்தில் தயாரிக்கப்பட்ட ஆடைகள் ஜாப் ஒர்க் செய்வதற்காக ஜாப் ஒர்க் நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இதனால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் காணப்படும். மேலும், திருப்பூரும் பரபரப்பாகவே இருந்து கொண்டிருக்கும்.

இந்த நிலையில் பின்னலாடை நிறுவனங்களில் வேலை செய்து வரும் தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையையொட்டி போனஸ் வழங்கப்படுவது வழக்கம். போனசை பெற்றுக்கொண்டு தொழிலாளர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே தொழிலாளர்களுக்கு தொழில்துறையினர் போனஸ் பட்டுவாடா செய்ய தொடங்கிவிட்டனர்.

இதனை பெற்றுக்கொண்டு தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கினர். இந்நிலையில் திருப்பூரில் உள்ள தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று விட்டதால், நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகையன்று திருப்பூர் மாநகரம் வெறிச்சோடி காணப்பட்டது.

இதனால் எப்போதுமே பரபரப்பாக இருக்கும் குமரன் சாலை, அவினாசி சாலை, ரெயில்வே மேம்பால பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வாகன போக்குவரத்து இன்றியும், மக்கள் நடமாட்டம் இன்றியும் வெறிச்சோடி காணப்பட்டது. திருப்பூரில் உள்ள பெரும்பாலான தெருக்களும் மக்கள் நடமாட்டமின்றி இருந்தது. பின்னலாடை நிறுவனங்களை போல் திருப்பூரில் உள்ள ஓட்டல்கள் மற்றும் கடைகளில் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் பலர் வேலை செய்து வருகிறார்கள்.

இந்த கடைகளில் உள்ள தொழிலாளர்களும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்கு தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர். இதனால் பெரும்பாலான ஓட்டல்கள் மற்றும் கடைகள் மூடப்பட்டு கிடந்தன. மேலும், கடந்த சில வாரங்களாகவே பொதுமக்கள் கூட்டம் அலைமோதிய ஜவுளிக்கடைகள் அனைத்தும் பொதுமக்கள் வரத்து இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. இதுபோல் கடைவீதிகளிலும் ஆட்கள் நடமாட்டமின்றி காணப்பட்டன.

திருப்பூரில் வேலை செய்கிறவர்கள் பெரும்பாலானவர்கள் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பதால், அவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லும் போது தங்களது இருசக்கர வாகனங்களை வாகன காப்பகங்களில் நிறுத்திவிட்டு சென்றுள்ளனர். இதனால் திருப்பூர் ரெயில் நிலைய வளாகம் மற்றும் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் உள்ள வாகன காப்பகங்களில் மோட்டார் சைக்கிள்களாக குவிந்துள்ளன.

மேலும், பலர் தங்களது மோட்டார் சைக்கிள்களை நிறுத்த முடியாமல் அவதியடைந்தனர். புதிய பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.

இதற்கிடையே நேற்று திருப்பூர் இயல்பு நிலைக்கு திரும்பியது. நேற்று காலையில் இருந்தே வாகன போக்குவரத்தும் அதிகமாக இருந்தது. பண்டிகையை கொண்டாட திருப்பூரின் அருகே உள்ள மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சொந்த ஊருக்கு சென்று விட்டு, திருப்பூருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். மேலும், சில கடைகளும், ஓட்டல்களும் திறக்கப்பட்டிருந்தன.

இதனால் திருப்பூரில் ஓரளவிற்கு இயல்பு நிலை திரும்பியுள்ளது. பின்னலாடை நிறுவனங்களில் ஆடை தயாரிப்பு நடைபெறவில்லை. சொந்த ஊர்களுக்கு சென்ற பின்னலாடை தொழிலாளர்கள் திரும்ப வந்த பின்னர் தான் ஆடை தயாரிப்பு நடைபெறும். மீண்டும் திருப்பூர் பரபரப்பாக இயங்க தொடங்கும்.

உணவுக்காக அலைந்த தொழிலாளர்கள்

தீபாவளி பண்டிகையை கொண்டாட பெரும்பாலானவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று விட்டதால் திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், பேக்கரிகள் மற்றும் கடைகள் மூடப்பட்டிருந்தன. இதனால் ஊருக்கு செல்லாத தொழிலாளர்கள் மற்றும் பலர் உணவுக்காக ஓட்டல்கள் மற்றும் கடைகளை தேடி அலைந்து கொண்டிருந்தனர்.

குமரன் சிலை அருகே மற்றும் யூனியன் மில் ரோடு, ராயபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே சிலர் தள்ளுவண்டி கடைகளில் உணவுகளை விற்பனை செய்து கொண்டிருந்தனர். இந்த தள்ளுவண்டி கடைகளிலும் கூட்டம் அலைமோதியது. இதனால் உணவு வகைகள் அனைத்தும் விரைவாக முடிந்து விட்டன. இதனால் உணவு சாப்பிட வந்த தொழிலாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். தொடர்ந்து வேறு பகுதிகளில் உள்ள தள்ளுவண்டி கடைகளை தேடி கண்டுபிடித்து சாப்பிட்டு சென்றனர்.

Next Story