அரசின் நலத்திட்டங்கள் விரைவாக சென்றடைய அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் அமைச்சர் பேச்சு


அரசின் நலத்திட்டங்கள் விரைவாக சென்றடைய அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் அமைச்சர் பேச்சு
x
தினத்தந்தி 8 Nov 2018 4:30 AM IST (Updated: 8 Nov 2018 2:36 AM IST)
t-max-icont-min-icon

அரசின் நலத்திட்டங்கள் தகுதியுள்ள பயனாளிகளை விரைவாக சென்றடைய அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த அதிகாரிகள் ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் சரோஜா பேசினார்.

தர்மபுரி,

சமூகநலத்துறை மற்றும் சத்துணவு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பல்வேறு பணிகள், திட்டங்கள் குறித்து தர்மபுரி மாவட்ட அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வு கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சமூகநலத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா தலைமை தாங்கினார். கலெக்டர் மலர்விழி முன்னிலை வகித்தார்.

இந்த கூட்டத்தில் அமைச்சர் சரோஜா பேசியதாவது:-

தமிழகஅரசின் சமூக நலத்துறை சார்பில் ஏழை, எளிய மக்களின் மேம்பாட்டிற்காக திருமண நிதிஉதவி, தாலிக்கு தங்கம், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. தமிழகஅரசு நடப்பாண்டில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்காக ரூ.545.25 கோடி ஒதுக்கியுள்ளது. இந்த தொகையில் ரூ.365 கோடி மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ.12 கோடி மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு கல்வித்திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்க ரூ.35 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொடக்கநிலை ஆயத்த பயிற்சி மையங்கள் மூலம் பிறந்த குழந்தைகளை பரிசோதனைசெய்து அவர்களுக்கு இருக்கும் மாற்றுத்திறனை எளிதில் கண்டறிந்து அதை குணப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ஏற்படும் மாற்றுத்திறனை எளிதாக குணப்படுத்த முடியும். தமிழகம் இத்துறையில் சிறந்து விளங்கி வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் திருமண நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கம் கோரி விண்ணப்பித்துள்ள தகுதியானவர்களுக்கு விரைவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். அரசின் நலத்திட்டங்கள் தகுதி உடைய பயனாளிகளுக்கு விரைவாக சென்று சேர அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் சரோஜா பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரகமத்துல்லாகான், உதவி கலெக்டர் சிவன்அருள், மாவட்ட சமூக நல அலுவலர் (பொறுப்பு) நாகலட்சுமி, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அமிர்பாஷா, பழங்குடியினர் நல அலுவலர் சரவணன், மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் கீதாராணி, கலால் உதவி ஆணையர் முத்தையன் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story