தீபாவளியையொட்டி 3 ஆயிரம் அடி மலைஉச்சியில் உள்ள தேவிரம்மனுக்கு சிறப்பு பூஜை
தீபாவளியையொட்டி 3 ஆயிரம் அடி மலை உச்சியில் உள்ள தேவிரம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
சிக்கமகளூரு, நவ.8-
தீபாவளியையொட்டி 3 ஆயிரம் அடி மலை உச்சியில் உள்ள தேவிரம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தேவிரம்மன் சிலை
சிக்கமகளூரு மாவட்டம் மல்லேனஹள்ளி தாலுகா பிண்டுகா கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற தேவிரம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தின் அருகே பெரிய மலை உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 3 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள இந்த மலையின் உச்சியில் தேவிரம்மன் சிலை அமைந்துள்ளது. இந்த அம்மனுக்கு ஆண்டுதோறும் தீபாவளியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடத்தப்படுவது வழக்கம்.
அதுபோல் இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு கடந்த 5-ந்தேதி, மலையின் அடிவாரத்தில் உள்ள தேவிரம்மன் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு வருகிறது. அதுபோல் மலையில் உள்ள தேவிரம்மன் சிலைக்கும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேவிரம்மனை தரிசனம் செய்ய கர்நாடகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இதனால் அந்த மலை முழுவதும் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாகவே காணப்படு கிறது.
சிறப்பு பூஜைகள்
இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மலையின் அடிவாரத்தில் உள்ள தேவிரம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அவர்கள் மலையின் உச்சியில் உள்ள தேவிரம்மனை தரிசிக்க மலையேறினர். கூட்டம், கூட்டமாக பக்தர்கள் மலையேறி 3 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள தேவிரம்மன் சிலை பகுதிக்கு வந்தடைந்தனர்.
அங்கு தேவிரம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் அம்மன் சிலை திரையால் மூடப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டது. அம்மனுக்கு அலங்காரம் முடிவடைந்ததும் காற்றின் அசைவால் மூடப்பட்டிருந்த திரை தானாக திறந்தது.
இந்த நிகழ்வு அங்கிருந்த பக்தர்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதைத்தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதனை பார்த்து பக்தர்கள் அனைவரும் உணர்ச்சி பொங்க சாமி தரிசனம் செய்தனர். நேற்று மட்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
பல்லக்கு ஊர்வலம்
விழாவையொட்டி கோவிலில் இன்று (வியாழக்கிழமை) தீமிதி திருவிழா நடைபெற உள்ளது. அதைதொடர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) அம்மன் பல்லக்கில் ஊர்வலமும் நடக்கிறது. இந்த பல்லக்கு ஊர்வலத்தை காண கர்நாடகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இங்கு குவிந்து வருகின்றனர்.
மேலும் தேவிரம்மனை தரிசனம் செய்ய வரும் வெளிமாநில பக்தர்களுக்கு ஏதுவாக கர்நாடக அரசு சார்பில் சிக்கமகளூருவில் இருந்து பிண்டுகாவுக்கு ஏராளமான சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி பிண்டுகா மலை அடிவாரம் மற்றும் மலை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story