காய்ச்சலால் பாதிப்பு: கடலூர் அரசு மருத்துவமனையில் 3 ஆயிரம் பேர் சிகிச்சை - நீண்ட நேரம் காத்திருந்து மருந்து-மாத்திரைகள் வாங்கி சென்றனர்


காய்ச்சலால் பாதிப்பு: கடலூர் அரசு மருத்துவமனையில் 3 ஆயிரம் பேர் சிகிச்சை - நீண்ட நேரம் காத்திருந்து மருந்து-மாத்திரைகள் வாங்கி சென்றனர்
x
தினத்தந்தி 8 Nov 2018 3:45 AM IST (Updated: 8 Nov 2018 2:48 AM IST)
t-max-icont-min-icon

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 3 ஆயிரம் பேருக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து மருந்து-மாத்திரைகள் வாங்கி சென்றனர்.

கடலூர், 

தமிழகம் முழுவதும் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்திலும் பன்றி மற்றும் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. மாவட்டத்தில் இதுவரை பன்றி காய்ச்சலுக்கு 2 பேரும், டெங்கு காய்ச்சலுக்கு 7 பேருக்கு மேலும் பலியாகி உள்ளனர். இதையடுத்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் முழுவீச்சில் முடுக்கி விட்டுள்ளது.

அதன்படி மருத்துவ முகாம் நடத்துவது, வீடு மற்றும் சுற்றுப்புறங்களில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றுவது, குப்பைகளை அப்புறப்படுத்துவது, வீடு வீடாக சென்று டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுப்புழுக்கள் இருக்கிறதா? என ஆய்வு செய்வது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் ஒரு சில இடங்களில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மந்தமாக இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.

இந்த நிலையில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் எதிரொலியால் காய்ச்சல், இருமல், சளி போன்ற நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள். இவர்களில் டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் காணப்படும் நபர்களின் ரத்த மாதிரி பரிசோதனை செய்யப்பட்டு, டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதற்கிடையே நேற்றும் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் நோயாளிகள் கூட்டம் அலைமோதியதை பார்க்க முடிந்தது. கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் புறநோயாளிகள் மற்றும் குழந்தைகள் சிகிச்சை பிரிவுகளில் நோயாளிகள் சிகிச்சை பிரிவு கட்டிடத்தின் நுழைவு வாயிலை கடந்தும் வெளிப்பகுதியில் நீண்ட நேரம் காத்து நின்று மருந்து-மாத்திரைகள் பெற்று சென்றனர். கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு நாள் ஒன்றுக்கு 2,500 முதல் 3 ஆயிரம் பேர் புறநோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள். 250 முதல் 300 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுகிறார்கள் என்று டாக்டர் ஒருவர் தெரிவித்தார். 

Next Story