பெங்களூருவில் சித்தராமையாவுடன் பரமேஸ்வர் திடீர் சந்திப்பு மந்திரிசபை விரிவாக்கம் குறித்து விவாதித்தனர்


பெங்களூருவில் சித்தராமையாவுடன் பரமேஸ்வர் திடீர் சந்திப்பு மந்திரிசபை விரிவாக்கம் குறித்து விவாதித்தனர்
x
தினத்தந்தி 7 Nov 2018 11:00 PM GMT (Updated: 7 Nov 2018 9:34 PM GMT)

பெங்களூருவில் சித்தராமையாவை பரமேஸ்வர் திடீரென்று சந்தித்து பேசினார். அவர்கள் இருவரும் மந்திரிசபை விரிவாக்கம் குறித்து விவாதித்தனர்.

பெங்களூரு, 

பெங்களூருவில் சித்தராமையாவை பரமேஸ்வர் திடீரென்று சந்தித்து பேசினார். அவர்கள் இருவரும் மந்திரிசபை விரிவாக்கம் குறித்து விவாதித்தனர்.

மந்திரிசபை விரிவாக்கம்

கர்நாடகத்தில் நடைபெற்ற 5 தொகுதிக்கான இடைத்தேர்தலில் 4 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இந்த நிலையில் சித்தராமையாவை பெங்களூருவில் உள்ள அவரது வீட்டில் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் நேரில் சந்தித்து பேசினார். அவருடன் மந்திரி ஜமீர்அகமதுகானும் இருந்தார். சுமார் ஒரு மணி நேரம் அவர்கள் ஆலோசனை நடத்தினர்.

அப்போது மந்திரிசபை விரிவாக்கம், வாரிய தலைவர்கள் நியமனம் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் ஜனதா தளம்(எஸ்) கட்சியுடன் தொகுதி பங்கீடு ஆகிய விஷயங்கள் குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர். காங்கிரஸ் தலைவர்கள் வருகிற 15-ந் தேதி டெல்லிக்கு சென்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து பேச முடிவு செய்துள்ளனர். அப்போது இடைத்தேர்தல் வெற்றி குறித்து முழு விவரங்களை ராகுல் காந்தியிடம் வழங்க உள்ளனர்.

வாரிய தலைவர் பதவி

சிவமொக்காவில் கூட்டணி கட்சியான ஜனதா தளம்(எஸ்) வேட்பாளர் தோல்விக்கு காரணம் குறித்தும் அவர்கள் விவாதித்தனர். அடுத்து வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அங்கு வெற்றிக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் அவர்கள் ஆலோசனை நடத்தினர்.

மந்திரி பதவிக்கு அதிக எம்.எல்.ஏ.க்கள் போட்டி போடுவதால், முதலில் எம்.எல்.ஏ.வுக்கு வாரிய தலைவர் பதவியை வழங்கி சமாதானப்படுத்துவது குறித்தும் அவர்கள் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது, விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து கூற பரமேஸ்வர் மறுத்துவிட்டார்.

Next Story