வீடு கட்ட குழி தோண்டிய போது மண் சரிந்து விழுந்து 2 பெண் தொழிலாளிகள் பரிதாப சாவு


வீடு கட்ட குழி தோண்டிய போது மண் சரிந்து விழுந்து 2 பெண் தொழிலாளிகள் பரிதாப சாவு
x
தினத்தந்தி 7 Nov 2018 11:15 PM GMT (Updated: 7 Nov 2018 9:46 PM GMT)

வீடு கட்ட குழி தோண்டிய போது மண் சரிந்து விழுந்து 2 பெண் தொழிலாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.

குடகு, 

வீடு கட்ட குழி தோண்டிய போது மண் சரிந்து விழுந்து 2 பெண் தொழிலாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.

கட்டிட தொழிலாளி

குடகு மாவட்டம் மடிகேரி தாலுகா கோலிவீதி பகுதியை சேர்ந்தவர் சுப்பையா. இவர் அதே பகுதியில் தனக்கு சொந்தமான இடத்தில் புதியதாக வீடு கட்ட முடிவு செய்தார். இதற்காக அஸ்திவாரம் தோண்டும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. இந்த பணியில் ஹாசன் மாவட்டம் பேலூர் பகுதியை சேர்ந்த யசோதா(வயது 20), கவுரம்மா(40), மற்றும் சில தொழிலாளிகள் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இவர்கள் அங்கு குழி தோண்டிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென்று மண் சரிந்து விழுந்தது. அப்போது அங்கு வேலை செய்து கொண்டிருந்த யசோதா, கவுரம்மா உள்பட சில தொழிலாளிகள் மீது மண் சரிந்து விழுந்து அமுக்கியது.

2 பெண் தொழிலாளிகள் சாவு

இதனை பார்த்த சக தொழிலாளி ஒருவர் கூச்சலிட்டு அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்தார். அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து மண்ணில் சிக்கியவர்களை மீட்க முயன்றனர். ஆனால் மண் விழுந்து அமுக்கியதால் யசோதா, கவுரம்மா ஆகியோர் மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தது தெரியவந்தது. மேலும் மண் சரிவில் சிக்கி வெங்கடசாமி, லட்சுமி ஆகியோர் படுகாயமடைந்து உயிருக்கு போராடினர். அவர்களை மீட்டு அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து மடிகேரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த மடிகேரி போலீசார் விரைந்து வந்து, பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மடிகேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து மடிகேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story