தீபாவளி பண்டிகையையொட்டி ரூ.9 கோடிக்கு மது விற்பனை கடந்த ஆண்டை விட அதிகம்


தீபாவளி பண்டிகையையொட்டி ரூ.9 கோடிக்கு மது விற்பனை கடந்த ஆண்டை விட அதிகம்
x
தினத்தந்தி 8 Nov 2018 3:30 AM IST (Updated: 8 Nov 2018 3:30 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி ரூ.9 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. இது கடந்த ஆண்டை விட அதிகம் ஆகும்

சேலம்,

சேலம் மாவட்டத்தில் 199 மதுக்கடைகள் உள்ளன. இந்த கடைகள் மூலம் வழக்கமாக நாள் ஒன்றுக்கு ரூ.4 கோடிக்கு மேல் மது விற்பனை நடைபெறும். அதேசமயம் புத்தாண்டு, பொங்கல், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்கள் மற்றும் முக்கிய திருவிழாக்காலங்களில் வழக்கத்தை விட கூடுதலாக மது விற்பனை நடைபெறுவது வழக்கம். இந்தநிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 5-ந் தேதி இரவில் பெரும்பாலான மதுபிரியர்கள் பீர், பிராந்தி, விஸ்கி, ரம் உள்ளிட்ட மதுபான வகைகளை வாங்கி அருந்தினர். இதனால் அன்றைய தினம் டாஸ்மாக் கடைகளில் மதுபிரியர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இந்தநிலையில், நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகையையொட்டி மதியம் 12 மணிக்கு டாஸ்மாக் கடைகளுக்கு மதுபிரியர்கள் திரண்டு வந்து, தங்களுக்கு பிடித்த மதுவகைகளை வாங்கி குடித்தனர். சேலம் மாநகரில் சாலையோரத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் முன்பு மதுவாங்குவதற்காக ஒருவருக்கொருவர் முண்டியடித்ததால் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இருப்பினும், மது பிரியர்கள் மதுவகைகளை போட்டி போட்டுக்கொண்டு வாங்கி சென்றதை காணமுடிந்தது. சேலம் டவுன் ரெயில் நிலையம் எதிரில் உள்ள மதுக்கடையில் கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீஸ் பாதுகாப்புடன் மது விற்பனை நடைபெற்றது. மதுபிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுவகைகளை வாங்கி சென்றனர்.

மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மதுவிற்பனை அமோகமாக நடைபெற்றது.

Next Story