தலோஜா, கார்கர், பிவண்டியில் ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து ரூ.33 லட்சம் கொள்ளை 3 பேருக்கு வலைவீச்சு


தலோஜா, கார்கர், பிவண்டியில் ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து ரூ.33 லட்சம் கொள்ளை 3 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 7 Nov 2018 11:00 PM GMT (Updated: 7 Nov 2018 10:11 PM GMT)

தலோஜா, கார்கர் மற்றும் பிவண்டியில் 3 ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து ரூ.33 லட்சம் கொள்ளையடித்து சென்ற 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மும்பை, 

தலோஜா, கார்கர் மற்றும் பிவண்டியில் 3 ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து ரூ.33 லட்சம் கொள்ளையடித்து சென்ற 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஏ.டி.எம்.மில் கொள்ளை

நவிமும்பை தலோஜா எம்.ஐ.டி.சி. பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று காலை இந்த ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்க வாடிக்கையாளர்கள் வந்திருந்தனர்.

அப்போது ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் இதுபற்றி போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். தகவல் அறிந்து வங்கி அதிகாரிகளும் அங்கு வந்தனர்.

கார்கர், பிவண்டி

போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை பார்வையிட்டனர். இதில், முகமூடி அணிந்து வந்த 3 பேர் கும்பல் ஏ.டி.எம். எந்திரத்தை கியாஸ் கட்டர் மூலம் உடைத்து பணத்தை அள்ளிச் சென்ற காட்சி பதிவாகியிருந்தது.

மேலும் இதே பாணியில் நவிமும்பை கார்கரில் உள்ள ஏ.டி.எம். மற்றும் பிவண்டியில் உள்ள ஒரு ஏ.டி.எம். எந்திரமும் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன.

அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை போலீசார் பார்வையிட்டனர். அதிலும், முகமூடி அணிந்த 3 பேர் கும்பல் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை அள்ளி செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.

3 பேருக்கு வலைவீச்சு

எனவே மேற்படி 3 சம்பவங்களையும் அதே ஆசாமிகள் தான் அரங்கேற்றி இருப்பது தெரியவந்துள்ளது. தலோஜா, கார்கரில் உள்ள ஏ.டி.எம்.களில் அதிகாலை 1 மணியில் இருந்து 2 மணிக்குள்ளும், பிவண்டியில் அதிகாலை 3 மணியில் இருந்து 4 மணிக்குள்ளும் இந்த கொள்ளை சம்பவத்தை அவர்கள் அரங்கேற்றியுள்ளனர்.

அவர்கள் 3 ஏ.டி.எம்.களிலும் இருந்து ரூ.33 லட்சம் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தலோஜா மற்றும் கார்கர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்கள் 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

3 ஏ.டி.எம்.களில் முகமூடி ஆசாமிகள் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story