பவாய் அருகே வியாபாரியிடம் ரூ.15 லட்சம் கொள்ளை 2 பேருக்கு வலைவீச்சு


பவாய் அருகே வியாபாரியிடம் ரூ.15 லட்சம் கொள்ளை 2 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 8 Nov 2018 4:30 AM IST (Updated: 8 Nov 2018 4:26 AM IST)
t-max-icont-min-icon

பவாய் அருகே வியாபாரி ஒருவர் உறவினர்களிடம் கடனாக வாங்கி வந்த ரூ.15 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற 2பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மும்பை, 

பவாய் அருகே வியாபாரி ஒருவர் உறவினர்களிடம் கடனாக வாங்கி வந்த ரூ.15 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற 2பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வியாபாரி

மும்பை சாக்கிநாக்காவை சேர்ந்த வியாபாரி கிருஷ்ணா பன்னாலால். இவர் நேற்று முன்தினம் உறவினர்களிடம் இருந்து ரூ.15 லட்சத்தை கடனாக பெற்று கொண்டு வீட்டிற்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். பவாய் அருகே மார்வே சாலையில் சென்ற போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேண்டும் என்றே ஆட்டோ மீது மோதியது.

இதனால் கோபம் அடைந்த ஆட்டோ டிரைவர் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவரிடம் தட்டி கேட்டார். இதில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதை பார்த்ததும் கிருஷ்ணா பன்னாலால் அவர்களின் சண்டையை விலக்கி விடுவதற்காக ஆட்டோவில் இருந்து இறங்கினார்.

ரூ.15 லட்சம் கொள்ளை

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்த வாலிபர் ஆட்டோவில் இருந்த கிருஷ்ணா பன்னாலாலின் பணப்பையை திருடினார். பின்னர் இருவரும் அங்கிருந்து வேகமாக தப்பிச் சென்று விட்டனர். இந்த நிலையில், பணப்பை காணாமல் போனதை கண்டு கிருஷ்ணா பன்னாலால் அதிர்ச்சியில் உறைந்தார். பின்னர் இதுபற்றி அவர் பவாய் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

கிருஷ்ணா பன்னாலால் கையில் அதிகளவில் பணம் வைத்து இருந்ததை தெரிந்து கொண்டு அதை கொள்ளை அடிப்பதற்காகவே இரண்டு பேரும் மோட்டார் சைக்கிளில் வந்தது தெரியவந்தது. கொள்ளையர்கள் இருவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story