முகநூல் நட்பால் விபரீதம்: மயக்க மருந்து கொடுத்து கோவை ஆசிரியை பலாத்காரம் - வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபர் மீது வழக்கு


முகநூல் நட்பால் விபரீதம்: மயக்க மருந்து கொடுத்து கோவை ஆசிரியை பலாத்காரம் - வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபர் மீது வழக்கு
x
தினத்தந்தி 9 Nov 2018 3:00 AM IST (Updated: 8 Nov 2018 11:33 PM IST)
t-max-icont-min-icon

முகநூல் மூலம் கோவை ஆசிரியையிடம் நட்பாக பழகிய வாலிபர் அவரை பலாத்காரம் செய்தார்.மேலும் வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சிங்காநல்லூர்,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்தவர் ராஜபிரவீன் (வயது 30). பட்டதாரியான இவர் வேலை தேடிக்கொண்டிருக்கிறார். இவருக்கு கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த 40 வயதான அரசு பள்ளி ஆசிரியையுடன் ‘முகநூல்’ மூலம் அறிமுகம் ஏற்பட்டது. கணவரை பிரிந்து வாழும் அந்த ஆசிரியையிடம் ராஜபிரவீன் நட்பாக பேசி பழகினார்.

பின்னர் ஒருவருக்கொருவர் செல்போனில் அடிக்கடி பேசிக்கொண்டனர். ராஜபிரவீன் தான் ஒரு பட்டதாரி என்றும் அரசு வேலை குறித்தும் அடிக்கடி சந்தேகங்கள் கேட்டு ஆசிரியையுடனான நெருக்கத்தை அதிகரித்துக்கொண்டார். ஒரு கட்டத்தில் ராஜபிரவீன் தான் குரூப்-2 தேர்வு எழுதப்போவதாகவும் அதற்கு பணம் தேவை என்றும் ஆசிரியையிடம் கூறிஉள்ளார். உடனே அவரும் ரூ.38 ஆயிரம் கொடுத்துள்ளார்.

இதன் பின்னர் ராஜபிரவீன் சில மாதங்களுக்கு முன்பு கோவை வந்துள்ளார். அப்போது இருவரும் ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கினர். அங்கு ஆசிரியைக்கு தெரியாமல் ராஜபிரவீன் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார். இது தெரியாமல் அதை ஆசிரியை குடித்துள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் மயங்கிய ஆசிரியையுடன் ராஜபிரவீன் உல்லாசம் அனுபவித்தார். அதை வீடியோ எடுத்த அவர் மயக்கம் தெளிந்து எழுந்த ஆசிரியையிடம் காண்பித்து மிரட்டியுள்ளார்.

இதனால் அந்த ஆசிரியை பயந்து போனார். அந்த ஆபாச வீடியோவை பயன்படுத்தி ராஜபிரவீன் ஆசிரியையின் வீட்டுக்கு 3 முறை சென்று உல்லாசம் அனுபவித்ததாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் ஆசிரியை தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி உள்ளார். அதற்கு ராஜபிரவீன் ரூ.2 லட்சம் தந்தால் திருமணம் செய்து கொள்வதாக கூறினார். ஆனால் அதற்கு ஆசிரியை மறுத்துவிட்டார்.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஆசிரியையின் வீட்டுக்கு வந்த ராஜபிரவீன் ஆசிரியையை மிரட்டி வீட்டில் இருந்த 10 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு தப்பி விட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியை இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரை தொடர்ந்து வாலிபர் ராஜபிரவீன் மீது இந்திய தண்டனை சட்டம் 406 (நம்பிக்கை மோசடி), 417 (ஏமாற்றுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதற்கிடையில் அந்த வழக்கு கோவை கிழக்குப்பகுதி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்த வழக்கை அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Next Story