தென்காசி அருகே விளைநிலத்தில் புகுந்த காட்டு யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரம்


தென்காசி அருகே விளைநிலத்தில் புகுந்த காட்டு யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரம்
x
தினத்தந்தி 9 Nov 2018 3:30 AM IST (Updated: 8 Nov 2018 11:44 PM IST)
t-max-icont-min-icon

தென்காசி அருகே விளைநிலத்தில் புகுந்த காட்டு யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

தென்காசி,

தென்காசி அருகே விளைநிலத்தில் புகுந்த காட்டு யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

யானைகள் அட்டகாசம்

நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள வடகரை, கடையநல்லூர், அடவிநயினார் அணைப்பகுதியான மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் காட்டு யானைகள் அதிக அளவில் உள்ளன. தற்போது கேரள மாநிலம் அச்சன்கோவில் மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் அந்த பகுதியில் உள்ள யானைகள், வடகரை, கடையநல்லூர் பகுதியில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.

கடந்த 3 நாட்களாக வடகரை சென்னாபொத்தை பகுதியில் உள்ள தென்னந்தோப்புக்குள் காட்டு யானைகள் புகுந்து சுமார் 50 தென்னை மரங்களை வேருடன் பிடுங்கி வீசி நாசம் செய்துள்ளன. இதனால் தென்னை விவசாயிகளான வடகரையை சேர்ந்த ஜாகிர் உசேன், அச்சன்புதூரை சேர்ந்த நாராயணன் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மா, பனை உள்ளிட்ட மரங்களையும் பிடுங்கி போட்டு விட்டு அங்கிருந்த மோட்டார் பம்புசெட்டுகளின் பைப்புகளையும் உடைத்து சேதப்படுத்தி உள்ளன.

யானைகளை விரட்டும் பணி

இதுகுறித்து ஜாகிர் உசேன் தலைமையில் விவசாயிகள் கலெக்டரிடம் முறையிட்டனர். இதைத்தொடர்ந்து யானைகளை காட்டுக்குள் விரட்ட வனத்துறையினருக்கு கலெக்டர் ஷில்பா உத்தரவிட்டார்.

இதையடுத்து வனத்துறையினர் நேற்று வடகரை பகுதியில் யானைகளால் சேதம் அடைந்த விளைநிலங்களை பார்வையிட்டனர். மேலும் வெடி வெடித்தும், ஒலிப்பெருக்கி மூலம் அதிக சத்தங்களை எழுப்பியும் யானைகளை காட்டுக்குள் விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். சென்னாபொத்தை பகுதியில் நின்ற 5 காட்டு யானைகளை, வனத்துறையினர் வெடி வெடித்து விரட்டினர்.

Next Story