மக்கள்தான் சொல்ல வேண்டும்: இலவசங்கள் வேண்டாம் என்று நடிகர்கள்-தயாரிப்பாளர்கள் கூறக்கூடாது அமைச்சர் பேட்டி


மக்கள்தான் சொல்ல வேண்டும்: இலவசங்கள் வேண்டாம் என்று நடிகர்கள்-தயாரிப்பாளர்கள் கூறக்கூடாது அமைச்சர் பேட்டி
x
தினத்தந்தி 8 Nov 2018 11:00 PM GMT (Updated: 8 Nov 2018 6:48 PM GMT)

இலவசங்கள் வேண்டாம் என மக்கள் தான் சொல்ல வேண்டுமே தவிர, காசுக்காக நடிப்பவர்களும், படத்தை தயாரிப்பவர்களும் சொல்லக்கூடாது என அமைச்சர் ஆர்.காமராஜ் கூறினார்.

சுந்தரக்கோட்டை,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து அமைச்சர் காமராஜ் நேரில் ஆய்வு செய்தார். சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடமும் கேட்டறிந்தார். தொடர்ந்து நோயாளிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார்.

இந்த ஆய்வின்போது திருவாரூர் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ், மாவட்ட வருவாய் அதிகாரி சக்திமணி, சுகாதாரத்துறை பணிகள் இணை இயக்குனர் டாக்டர் உமா, துணை இயக்குனர் ஸ்டான்லி மைக்மேல், மன்னார்குடி உதவி கலெக்டர் பத்மாவதி, மன்னார்குடி நகராட்சி ஆணையர் விஸ்வநாதன், நகராட்சி பொறியாளர் இளங்கோவன், மாவட்ட ஊராட்சிக்குழு முன்னாள் உறுப்பினர் பொன்.வாசுகிராம், மன்னார்குடி ஒன்றியக்குழு முன்னாள் துணைத் தலைவர் தமிழ்செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர் அமைச்சர் காமராஜ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு முழுவதும் தமிழக அரசு டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது. அந்த அடிப்படையில் தமிழக முதல்-அமைச்சர் முன்னெச்சரிக்கை கூட்டங்களை நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும் என உத்தரவிட்டு இருக்கிறார். அதன்படி சுகாதாரத்துறை மற்றும் அனைத்து துறைகளும் இணைந்து செயல்பட்டு டெங்கு பாதிப்பு இல்லை என்ற நிலையை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவாரூர் மாவட்டத்தில் 26 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு உரிய சிகிச்சை மூலம் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டம் முழுவதும் 30 மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு, கலெக்டர் மேற்பார்வையில் நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது.

சர்கார் படத்தில் இலவச திட்டங்கள் குறித்து விமர் சனம் வந்திருப்பதாக எங்கு பாார்த்தாலும் சர்ச்சைக்குரிய பேச்சாக இருக்கிறது. எங்களை பொறுத்தவரையில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நலத்திட்டங்களை கொச்சைப்படுத்தி பேசுவது கண்டனத்துக்குரியது.

இலவசங்களை தவிர்க்க வேண்டும் என்று சினிமாவில் வேண்டுமானால் வீராப்பு வசனம் பேசலாம். இந்திய அளவில் 25.8 சதவீதம் என உள்ள உயர்கல்வி செல்லும் மாணவர்களின் சராசரியை விட தமிழகத்தில் உயர்கல்வி செல்லும் மாணவர்களின் சராசரி 48.6 சதவீதம் என உயர் நிலையில் உள்ளதற்கு ஜெயலலிதாவின் திட்டங் களான விலையில்லா மடிக் கணினி, சத்துணவு திட்டம், சீருடைகள் என பல்வேறு இலவச நலத்திட்டங்களால்தான் இந்த உயர்வு கிடைத்துள்ளது.

ஆடு, மாடு, கோழி வழங்குவது போன்ற இலவச திட்டங்களால் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்திருப்பதை யாராலும் மறுக்க முடியாது.

உண்மை இவ்வாறு இருக்கும்போது இலவசங்கள் வேண்டாம் என மக்கள்தான் சொல்ல வேண்டுமே தவிர, காசுக்காக சினிமாவில் நடிப்பவர்களும் படம் தயாரிப்பவர்களும் கூறக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story