சர்கார் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் விஜய் உருவபொம்மை எரிப்பு அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


சர்கார் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் விஜய் உருவபொம்மை எரிப்பு அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 Nov 2018 10:30 PM GMT (Updated: 8 Nov 2018 6:54 PM GMT)

சர்கார் படத்துக்கு எதிராக ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க. வினர் நடிகர் விஜய் உருவபொம்மையை தீ வைத்து எரித்தனர்.

ஊட்டி, 

நடிகர் விஜய் நடித்த சர்கார் திரைப்படம் கடந்த 6-ந் தேதி தீபாவளி அன்று வெளியானது. இந்த படத்தில் சர்ச்சை காட்சிகள் இடம் பெற்று உள்ளதாக கூறி ஊட்டியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஊட்டி நகர அ.தி.மு.க. செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார். நீலகிரி மாவட்ட துணை செயலாளர் சிவலிங்கம், மகளிர் அணி நிர்வாகி நிஷாந்தி, முன்னாள் கவுன்சிலர் இம்தியாஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது அ.தி.மு.க.வினர் மறைத்து வைத்து இருந்த நடிகர் விஜய்யின் உருவபொம்மையை தீ வைத்து எரித்தனர். அதனை தொடர்ந்து அ.தி.மு.க.வினர் காபிஹவுஸ் பகுதியில் இருந்து புளூமவுண்டன் சாலை வழியாக ஊர்வலமாக ஊட்டி நகர மத்திய போலீஸ் நிலையத்துக்கு சென்றனர். பின்னர் ஊட்டி நகர செயலாளர் சண்முகம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சர்கார் திரைப்படத்தில் தமிழக அரசின் திட்டங்களையும், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பற்றியும் மோசமான காட்சிகள் இடம் பெற்று உள்ளதாக கேள்விப்பட்டு, நானும், கட்சியினரும் கோவையில் அந்த திரைப்படத்தை பார்த்தோம். படத்தில் வெளியிடப்பட்ட காட்சிகள் திட்டமிடப்பட்டு அ.தி.மு.க. அரசின் மக்கள் நல செயல்பாடுகளை மிக மோசமாக விமர்சித்தும், நடிகர் விஜய் அரசியல் ஆதாயம் தேடுவதற்காகவும் இயக்குனர் முருகதாஸ் துணை போய் உள்ளார். சர்கார் பட தயாரிப்பாளர் கலாநிதி மாறன் அரசியல் ஆதாயத்துக்காக திரைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

இந்த படத்தில் நடிக்கும் நடிகை, முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் கோமளவள்ளி என்ற இயற்பெயரை சூட்டி, திட்டமிடப்பட்டு கேவலமாக அரசியல் செய்யும் வகையில் படம் எடுக்கப்பட்டு உள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சியில் விலை இல்லாத மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டங்கள் எவ்வித ஆதாரமும் இன்றி ஊழல் புரிவதற்கான திட்டங்கள் என்னும் விதத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கொச்சைப்படுத்தும் வகையில், சர்கார் திரைப்படம் அரசியல் ஆதாயத்துக்காக வெளியிடப்பட்டு உள்ளது. இந்த படத்தில் கீழ்த்தரமான காட்சிகளை அமைத்து ஜெயலலிதா பெயரை பயன்படுத்தி மக்கள் இடையே தீய நோக்குடன் அவதூறு பரப்பும் வகையில் வெளியிட்டதால், எங்களது மனம் மிகவும் புண்பட்டு உள்ளது. எனவே, திரைப்பட இயக்குனர் முருகதாஸ், நடிகர் விஜய், தயாரிப்பாளர் கலாநிதிமாறன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

கோத்தகிரி பஸ் நிலையத்தில் நேற்று மாலையில் நீலகிரி மாவட்ட கூட்டுறவு சங்க தலைவர் ஹால்துரை, கீழ் கோத்தகிரி அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஸ்டீபன், முன்னாள் கவுன்சிலர் வடிவேல், முன்னாள் ஒன்றிய செயலாளர் பார்த்தீபன், நிர்வாகிகள் காரி, போசன் உள்பட அ.தி.மு.க.வினர் திரண்டனர். பின்னர் அவர்கள் சர்கார் படத்தை கண்டித்து நடிகர் விஜய்யின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர்.

அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த விஜய் ரசிகர் மன்ற மாவட்ட துணை செயலாளர் பிரபு உருவபொம்மையை பிடுங்கிக்கொண்டு ஓடினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவரிடம் இருந்து அ.தி.மு.க.வினர் விஜய்யின் உருவபொம்மையை பிடுங்கி வந்து எரித்தனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம், சப்- இன்ஸ்பெக்டர்கள் நசீர், கவுதம் மற்றும் போலீசார் அவர்களை தடுத்து அங்கிருந்து கலைந்து செல்ல வைத்தனர்.

இதனை தொடர்ந்து அ.தி.மு.க.வினர் கோத்தகிரி காமராஜர் சதுக்கம் பகுதிக்கு சென்று அங்கு மேலும் ஒரு உருவபொம்மை மற்றும் உருவபடத்தை எரித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். 

Next Story