கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் தேசிய தரக்கட்டுப்பாடு ஆணைய குழுவினர் அடுத்த வாரம் ஆய்வு கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்


கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் தேசிய தரக்கட்டுப்பாடு ஆணைய குழுவினர் அடுத்த வாரம் ஆய்வு கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
x
தினத்தந்தி 8 Nov 2018 10:15 PM GMT (Updated: 8 Nov 2018 7:04 PM GMT)

கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் தேசிய தரக்கட்டுப்பாடு ஆணைய குழுவினர் அடுத்த வாரம் ஆய்வு மேற்கொள்வதாக மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

கோவில்பட்டி, 

கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் தேசிய தரக்கட்டுப்பாடு ஆணைய குழுவினர் அடுத்த வாரம் ஆய்வு மேற்கொள்வதாக மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் ஆய்வு

கோவில்பட்டியில் உள்ள மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று காலையில் ஆய்வு மேற்கொண்டார். அவர் மகப்பேறு பிரிவு, பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு, குழந்தைகள் காய்ச்சல் பிரிவு, பிரதான மருந்து கிடங்கு உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர், அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் நோயாளிகள் மற்றும் அவர்களுடைய உறவினர்களிடமும் குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர் கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களிடம் கூறியதாவது:-

தேசிய தரச்சான்று பெற...

தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அடுத்தபடியாக, கோவில்பட்டியில் உள்ள மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரி அனைத்து நவீன வசதிகளுடனும், மருத்துவ குழுவினருடனும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு தேசிய தரச்சான்று பெற ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தேசிய தரக்கட்டுப்பாடு ஆணைய குழுவினர் அடுத்த வாரம் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு மேற்கொள்கின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் முதல் முறையாக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு தேசிய தரச்சான்றிதழ் கிடைக்கும் என்று நம்புகிறோம். இதற்காக இங்கு பணியாற்றும் டாக்டர்கள், செவிலியர்களுக்கு துறைவாரியாக பயிற்சி அளித்து வருகிறோம். கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் இந்த மாதத்தில் புற்றுநோய் சிகிச்சை மற்றும் வலி நிவாரண சிகிச்சை மையம் தொடங்கப்பட உள்ளது.

விழிப்புணர்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 5 பேரும், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 3 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அந்த குழந்தை நலமாக உள்ளது. டெங்கு தடுப்பு நடவடிக்கையில் சுமார் 1,400 சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையங்கள், திருமண மண்டபங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட இடங்களில் ‘லைசால்‘ கரைசல் 5 சதவீதம் சேர்த்து சுத்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது. சுத்தமான முறையில் கைகளை கழுவும் முறை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.

அவருடன் கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, தாசில்தார் பரமசிவன், அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் கமலவாசன், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பரிதா ஷெரின், சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் போஸ்கோ ராஜா மற்றும் டாக்டர்கள் உடன் இருந்தனர்.

த.மா.கா.வினர் கோரிக்கை மனு

மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் த.மா.கா. நகர தலைவர் ராஜகோபால், மாவட்ட செயலாளர் என்ஜினீயர் தவமணி உள்ளிட்டவர்கள் கோரிக்கை மனு வழங்கினர். அதில், கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றும் டாக்டர்களை மாற்று பணிக்கு அனுப்ப கூடாது. இங்கு 24 மணி நேரமும் ஸ்கேன் மையம் செயல்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

Next Story