கும்மிடிப்பூண்டி அருகே பரிதாபம்: ஷேர் ஆட்டோவில் இருந்து தவறி விழுந்து பள்ளி மாணவி சாவு


கும்மிடிப்பூண்டி அருகே பரிதாபம்: ஷேர் ஆட்டோவில் இருந்து தவறி விழுந்து பள்ளி மாணவி சாவு
x
தினத்தந்தி 9 Nov 2018 4:00 AM IST (Updated: 9 Nov 2018 12:59 AM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி அருகே, ஷேர் ஆட்டோவில் இருந்து தவறி விழுந்து பள்ளி மாணவி பரிதாபமாக இறந்தார்.

கும்மிடிப்பூண்டி, 

கும்மிடிப்பூண்டியை அடுத்த பாதிரிவேடு அருகே உள்ள நேமலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மகள் தமிழ்ச்செல்வி (வயது 10). இவர் ஆந்திர மாநிலம் சத்யவேட்டில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். தமிழ்ச்செல்வி நேற்று மாலை பள்ளி முடிந்து சத்யவேட்டில் இருந்து ஷேர்ஆட்டோவில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.

அவருடன் அதே பள்ளியை சேர்ந்த 14 மாணவர்கள் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். வேன் இல்லாததால் மாணவர்கள் பயணம் செய்வதற்காக ஷேர் ஆட்டோவை பள்ளி நிர்வாகமே ஏற்பாடு செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது.

மாணவி பலி

ஷேர் ஆட்டோ பாதிரிவேடு அடுத்த ரோசாநகர் அருகே வந்தபோது, அதில் பயணம் செய்த தமிழ்ச்செல்வி திடீரென ஷேர் ஆட்டோவில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த மாணவியை மீட்டு சிகிச்சைக்காக ஈகுவார்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே மாணவி தமிழ்ச்செல்வி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

டிரைவர் தப்பி ஓட்டம்

இதற்கிடையே விபத்து ஏற்பட்டவுடன் ஷேர் ஆட்டோவை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஆந்திர மாநில பதிவெண் கொண்ட அந்த ஆட்டோவை ஓட்டி வந்தவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இது குறித்து கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் குமரன் தலைமையில் பாதிரிவேடு சப்-இன்ஸ்பெக்டர் சதாசிவம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story