மோடியை வீழ்த்த அகில இந்திய அளவில் தலைவர்கள் ஒன்று சேர்ந்து வருகிறார்கள் மு.க.ஸ்டாலின் பேச்சு


மோடியை வீழ்த்த அகில இந்திய அளவில் தலைவர்கள் ஒன்று சேர்ந்து வருகிறார்கள் மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 8 Nov 2018 10:45 PM GMT (Updated: 8 Nov 2018 7:49 PM GMT)

மாநிலங்களை மதிக்காத மோடியை வீழ்த்த அகில இந்திய அளவில் தலைவர்கள் ஒன்று சேர்ந்து வருகிறார்கள் என்று பெரம்பலூரில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பரபரப்பாக பேசினார்.

குன்னம்,

பெரம்பலூர்-அரியலூர் தேசிய நெடுஞ்சாலை ஒதியம் கைகாட்டியில் மத்திய-மாநில அரசுகளை கண்டித்து நேற்று பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட தி.மு.க. சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் குன்னம் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். அரியலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் வரவேற்று பேசினார். கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

ஜனநாயக போர்

மத்தியில் நடந்து வருகிற பாசிச பா.ஜ.க. ஆட்சியையும், மாநிலத்தில் உள்ள ஊழல் அ.தி.மு.க. அரசையும் ஒரே நேரத்தில் அகற்றுவதற்கான ஜனநாயக போரை இன்று தொடங்கியிருக்கிறேன். அடர்ந்த காடுகள் நிறைந்த இந்த பெரம்பலூர் பகுதி ஒரு காலத்தில் பெருங்குழியூர் என அழைக்கப்பட்டது. பாசிச விலங்குகளையும், ஊழல் கிருமிகளையும் வேட்டையாடுவதற்காக அறைகூவல் விடுக்க இதனை ஒரு களமாக தி.மு.க. தேர்ந்தெடுத்து இருக்கிறது. எனது வாழ்நாளில் மறக்க முடியாத கூட்டம் இது. நான் தி.மு.க. தலைவராக பொறுப்பேற்ற பின்னர் பங்குபெறும் முதல் பொதுக்கூட்டமும் இது தான்.

இந்திய தேசத்தில் ஒரு புதிய பிரதமரை உருவாக்க வேண்டிய கட்டத்தில் நாம் இருக்கிறோம். ஒரு வேளை பாராளுமன்ற தேர்தலுடன், நாம் எதிர்பார்த்து கொண்டிருக்கிற தமிழக சட்டமன்ற தேர்தலும் சேர்ந்தே வரலாம். எப்படி வந்தாலும், அதனை சந்திக்க நாம் தயாராகி இருக்கிறோம். இரண்டு கட்சிகளையும் நாட்டை விட்டே விரட்டக்கூடிய வல்லமை தி.மு.க.வுக்கு உண்டு.

இன்று ஒரு முக்கியமான நாள். 2 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் தான் பணமதிப்பு நீக்கம் என்கிற ஒரு முட்டாள்தனமான அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டார். அன்று அதற்கு அவர் கூறிய காரணங்கள் ஊழல் அடியோடு அழிக்கப்படும், கருப்பு பணம் ஒழிக்கப்படும் என்றார். ஆனால் அவர் கூறியபடி எதுவும் நடைபெறவில்லை.

வெளிநாடு வாழ் இந்தியர் என கேள்விப்பட்டிருக்கிறோம். வெளிநாடு வாழ் பிரதமர் மோடி ஒருவர் தான். இன்று வரை அவர் 84 நாடுகளுக்கு சென்று வந்துள்ளார். இதனை நான் ஆதாரத்துடன் கூறுகிறேன். இதற்காக 1,484 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. மோடியை வீழ்த்துவதற்கு அகில இந்திய அளவில் தலைவர்கள் ஒன்று சேர்ந்து வருகிறார்கள். ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து பேசினார். கர்நாடகாவில் முன்னாள் பிரதமர் தேவேகவுடாவையும் சந்தித்துள்ளார்.

நாளை (அதாவது இன்று) சந்திரபாபு நாயுடு சென்னைக்கு வந்து தி.மு.க. தலைவராகிய என்னையும் சந்தித்து பேச இருக்கிறார். இந்த சந்திப்பின் போது அவரிடம், மாநில உரிமைகளை எந்த நிலையிலும் வேதனை, சோதனை வந்தாலும் விட்டுக்கொடுக்க கூடாது என்ற நீதியை வலியுறுத்த இருக்கிறேன்.

மோடியை வீழ்த்துவதற்கு இப்படி தலைவர்கள் எல்லாம் ஒன்று சேருவதற்கு அவர் மீது எங்களுக்கு தனிப்பட்ட பகையோ, பிரச்சினையோ இல்லை. அவரால் இந்த நாட்டு மக்களுக்கு எந்த பலனும் இல்லை என்பதற்காக தான் ஒன்று சேர்ந்து உள்ளோம். மோடி மாநிலங்களை மதிப்பதே கிடையாது. உச்சநீதிமன்றத்துடன் மோதல், சி.பி.ஐ.யுடன் பிரச்சினை, ரிசர்வ் வங்கியுடன் தகராறு என இப்படி தான் அவரது நிலைப்பாடு உள்ளது.

தமிழ்நாட்டில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. எந்த அச்சமும் இல்லாமல் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஊழல் செய்து வருகிறார். நெடுஞ்சாலை துறையில் டெண்டர் விட்டதில் ரூ.3 ஆயிரம் கோடி ஊழல் நடந்ததை தி.மு.க. சார்பில் கண்டுபிடித்து கொடுத்தோம்.

ஐகோர்ட்டில் தி.மு.க. சார்பில் தொடரப்பட்ட வழக்கில் ஊழலுக்கு முகாந்திரம் இருப்பதாக சி.பி.ஐ.க்கு உத்தரவிடப்பட்டது. ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய எடப்பாடி பழனிசாமி எனது மடியில் கனமில்லை, அதனால் பயமில்லை என்கிறார். அப்படி என்றால் இதனை எதிர்த்து ஏன் மேல்முறையீடு செய்திருக்கிறார் என நான் கேட்க விரும்புகிறேன்.

எடப்பாடி பழனிசாமி அரசு, மத்திய அரசிடம் மண்டியிட்டு, சரணாகதியடைந்து தமிழக மக்களின் நலன்களை புறக்கணித்து வருகிறது. அதனால் தான் மத்தியில் உள்ள அரசையும், அதற்கு எடுபிடியாக உள்ள மாநில அரசையும் வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்று கூறுகிறேன். அதற்கான உறுதி எடுத்து கொள்ளும் களமாக இந்த கூட்டம் அமைந்துள்ளது. இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

இதனை தொடர்ந்து முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.என்.நேரு ஆகியோரும் பேசினார்கள். முடிவில் வேப்பூர் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.

Next Story