மாவட்ட செய்திகள்

கோவையில் ‘சர்கார்’ படத்துக்கு எதிர்ப்பு - தியேட்டர்கள் முன்பு அ.தி.மு.க.வினர் போராட்டம் + "||" + Resistance to 'Sarkar' in Coimbatore -Before the theaters the ADMK struggle

கோவையில் ‘சர்கார்’ படத்துக்கு எதிர்ப்பு - தியேட்டர்கள் முன்பு அ.தி.மு.க.வினர் போராட்டம்

கோவையில் ‘சர்கார்’ படத்துக்கு எதிர்ப்பு - தியேட்டர்கள் முன்பு அ.தி.மு.க.வினர் போராட்டம்
சர்கார் படம் திரையிடப்பட்ட தியேட்டர்களில் அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினார்கள்.பேனர்கள் கிழிக்கப்பட்டன.
கோவை,

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய வகையில் அரசியல் வசனங் கள் இடம்பெற்றுள்ளன. தமிழக அரசு குறித்து இந்த படத்தில் விமர்சித்து இருப்பதாக அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த வசனங்களை நீக்குமாறும் வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில் கோவையில் சர்கார் படம் திரையிடப்பட்ட தியேட்டர்கள் முன்பு அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினார்கள். அ.தி.மு.க. மாநகர் மாவட்ட தொழில்நுட்ப அணி இணைச்செயலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் அ.தி.மு.க.வினர் கோவை கலெக்டர் அலுவலகம் மற்றும் போலீஸ் கமிஷனர் அலுவலகங்களுக்கு சென்று மனு கொடுத்தனர்.

அதில், தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அனைத்து திட்டங்களையும் கேவலப்படுத்திய சர்கார் படத்தை கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் தடை செய்து அந்த படத்தின் இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மனுவை கொடுத்த பின்னர் அ.தி.மு.க.வினர் சாந்தி தியேட்டர் முன்பு திரண்டு கண்டன கோஷமிட்டனர். பின்னர் நடிகர் விஜய்யின் பேனர்களை கிழித்து எறிந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சர்ச்சைக்குரிய வசனங்களை நீக்குமாறு கண்டன கோஷங்களை எழுப்பிய அ.தி.மு.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதேபோல் கோவை சென்ட்ரல் தியேட்டருக்கு அ.தி.மு.க.வை சேர்ந்த சிலர் சென்று, சர்கார் படத்தை நிறுத்துமாறு கோஷமிட்டனர். போலீசார் விரைந்து சென்று அவர்களை தியேட்டரை விட்டு வெளியே அனுப்பினார்கள். இந்த சம்பவங்களை தொடர்ந்து கோவையில் சர்கார் படம் திரையிடப் பட்டு உள்ள தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

சர்கார் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊட்டியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊட்டி நகர அ.தி.மு.க. செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது அ.தி.மு.க.வினர் மறைத்து வைத்து இருந்த நடிகர் விஜய்யின் உருவபொம்மையை தீ வைத்து எரித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அ.தி.மு.க.வினர் காபிஹவுஸ் பகுதியில் இருந்து புளூமவுண்டன் சாலை வழியாக ஊர்வலமாக ஊட்டி நகர மத்திய போலீஸ் நிலையத்துக்கு சென்று சர்கார் படத்துக்கு தடைவிதிக்க கோரி மனு அளித்தனர்.