சொத்து தகராறில்: பலூன் சுடும் துப்பாக்கியால் தங்கையை சுட்டவர் கைது


சொத்து தகராறில்: பலூன் சுடும் துப்பாக்கியால் தங்கையை சுட்டவர் கைது
x
தினத்தந்தி 9 Nov 2018 3:30 AM IST (Updated: 9 Nov 2018 2:26 AM IST)
t-max-icont-min-icon

சொத்து தகராறில் தங்கையை பலூன் சுடும் துப்பாக்கியால் சுட்டவரை போலீசார் கைது செய்தனர்.

கடத்தூர், 

கோபி அருகே உள்ள தொட்டம்பாளையத்தை சேர்ந்தவர் கணேசமூர்த்தி. அவருடைய மனைவி நதியா (வயது 28). தனியார் மில்லில் காசாளராக உள்ளார்.

நதியாவின் தந்தை சின்னசாமியின் வீடும் அதே பகுதியில் உள்ளது. நதியாவுக்கும் அவருடைய அண்ணன் பங்காருசாமிக்கும் ஏற்கனவே சொத்து தகராறு இருந்து வந்தது. இந்தநிலையில் தீபாவளி அன்று கணவன் கணேசமூர்த்தியுடன் தந்தை வீட்டுக்கு நதியா சென்றார். அப்போது நதியாவுக்கும், பங்காருசாமிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது ஆத்திரமடைந்த பங்காருசாமி தான் வைத்திருந்த பலூன் சுடும் துப்பாக்கியால் (ஏர்கன்) நதியாவை சுட்டார். இதில் நதியாவுக்கு இடது தோள் பட்டையில் காயம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்து பங்காருசாமி ஓடிவிட்டார். நதியா கோபி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுபற்றி கோபி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள பங்காருசாமியை தேடி வந்தார்கள்.

இந்தநிலையில் தொட்டம்பாளையத்தில் பங்காருசாமி பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு சென்று பங்காருசாமியை பிடித்து கைது செய்தார்கள்.

பின்னர் அவர் கோபி முதலாம் வகுப்பு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

Next Story