மார்த்தாண்டத்தில் துணிகரம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டரின் செல்போனை திருடியவர் கைது


மார்த்தாண்டத்தில் துணிகரம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டரின் செல்போனை திருடியவர் கைது
x
தினத்தந்தி 8 Nov 2018 10:15 PM GMT (Updated: 8 Nov 2018 9:11 PM GMT)

மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டரின் செல்போனை திருடியவர் கைது செய்யப்பட்டார். கண்காணிப்பு கேமரா காட்டிக் கொடுத்ததால் போலீசில் சிக்கினார்.

குழித்துறை,

மார்த்தாண்டம் அருகே உள்ள நட்டாலம் குன்னம்பாறை பகுதியை சேர்ந்தவர் ரோஸ்சர் பென்னி (வயது 31), கொத்தனார். இவர் நேற்று தனது உறவினரின் விபத்து தொடர்பாக தன்னுடன் சிலரை அழைத்துக்கொண்டு மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்கு சென்றார்.

போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜாண் கென்னடியிடம் விபத்து தொடர்பாக அவர், பேசிக்கொண்டிருந்தார். அப்போது ஜாண் கென்னடி தனது செல்போனை மேஜை மீது வைத்து விட்டு விபத்து பற்றிய குறிப்புகளை எடுத்துக்கொண்டிருந்தார்.

அவர், சிறிது நேரம் கழித்து செல்போனை பார்த்தபோது, அது மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், நிலையத்துக்குள் இருந்த அனைவரிடம் இதுபற்றி கேட்டார். ஆனால் யாரும் எடுக்க வில்லை என்று கூறினர். ‘போலீஸ் நிலையத்துக்குள் திருட்டா...‘ என்று மற்ற போலீசாரும் அதிர்ச்சி அடைந்து அனைவரிடமும் தீவிர விசாரணை நடத்தினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அதைதொடர்ந்து போலீசார் நிலையத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது, மேஜை மீது வைத்திருந்த செல்போனை, கூட்டத்தை பயன்படுத்தி ரோஸ்சர் பென்னி மெதுவாக எடுத்ததும், பின்னர், அவர் நிலையத்தை விட்டு வெளியே சென்றதும், மீண்டும் உள்ளே வந்ததும் பதிவாகி இருந்தது.

உடனே போலீசார் ரோஸ்சர் பென்னியை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் செல்போனை திருடி, நிலையத்தின் பின் பகுதியில் பல வழக்குகளில் பறிமுதல் செய்து வைக்கப்பட்டு இருந்த மோட்டார்சைக்கிளில் பதுக்கி வைத்து இருந்தது தெரியவந்தது. உடனே போலீசார் செல்போனை மீட்டனர்.

இதுகுறித்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜாண் கென்னடி கொடுத்த புகாரின் போல் சப்-இன்ஸ்பெக்டர் ஜாண் விக்டர், இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ரோஸ்சர் பென்னியை கைது செய்தனர்.

Next Story