மாவட்ட செய்திகள்

அலகுமலை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி கோவிலில் கந்தசஷ்டி விழா + "||" + Alakumalai In Muthukumara BalaThandayuthapani temple Kandasakti Festival

அலகுமலை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி கோவிலில் கந்தசஷ்டி விழா

அலகுமலை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி கோவிலில் கந்தசஷ்டி விழா
பொங்கலூரை அடுத்துள்ள அலகுமலை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி கோவிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி பக்தர்கள் கங்கணம் அணிந்து விரதம் தொடங்கினார்கள்.
பொங்கலூர்,

திருப்பூர் மாவட்டம், பொங்கலூரை அடுத்துள்ள அலகுமலையில் பிரசித்தி பெற்ற முத்துக்குமார பாலதண்டாயுதபாணி சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விழா நேற்று காலை 7.30 மணிக்கு கோவில் மலை அடிவாரத்தில் உள்ள கே.பி.எம்-கே.பி.டி டிரஸ்ட் முத்து திருமண மண்டபத்தில் கணபதி பூஜையுடன் தொடங்கியது. அப்போது பக்தர்கள் கங்கணம் அணிந்து தங்கள் விரதத்தை தொடங்கினார்கள். இதனை திருப்பூர் அன்பு இல்லத்தின் நிறுவனர் சுவாமி பூர்ண சேவானந்தர் பக்தர்களுக்கு கங்கணம் அணிவித்து தொடங்கி வைத்தார்.


தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 12-ந்தேதி வரை தினசரி காலை 7 மணிக்கு கந்தசஷ்டி கவசம் பாராயணம், வேல் அபிஷேகமும், மாலை 5 மணிக்கு பக்தி சொற்பொழிவு ஆகியனவும் நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வருகிற 13-ந்தேதி நடைபெறுகிறது. அன்று மதியம் 2.30 மணிக்கு வேல் வாங்குதல் நிகழ்ச்சியும், மாலை 5 மணிக்கு சூரசம்ஹாரமும் நடைபெறுகிறது. பின்னர் மாலை 6 மணிக்கு பக்தர்கள் கங்கணம் அவிழ்த்து தங்கள் விரதத்தை முடித்துக்கொள்கிறார்கள்.

14-ந்தேதி காலை 10 மணிக்கு முத்துக்குமார பாலதண்டாயுதபாணிக்கு திருக்கல்யாணம் மலை அடிவாரத்தில் உள்ள கே.பி.எம்-கே.பி.டி ஸ்ரீமுத்து திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. சிவாச்சாரியார்கள் முன்னின்று வள்ளி-தெய்வானைக்கு திருமாங்கல்யத்தை அணிவித்து திருக்கல்யாணத்தை நடத்தி வைக்கிறார்கள்.

தொடர்ந்து அனைவருக்கும் திருக்கல்யாண விருந்து வழங்கப்பட உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் பக்தர் பேரவை, மாதாந்திர சஷ்டி விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.