திருக்கார்த்திகை திருவிழாவையொட்டி அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி மும்முரம்
திருக்கார்த்திகை திருவிழாவையொட்டி மதுரையில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
மதுரை,
திருக்கார்த்திகை தீப திருவிழா, வருகிற 25-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், பொதுமக்கள் தங்களது வீடுகளில் தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம். திருக்கார்த்திகை திருவிழாவிற்கு இன்னும் இரண்டு வாரங்கள் உள்ள நிலையில், அகல் விளக்கு தயாரிக்கும் பணியும் மும்முரமாக நடந்து வருகிறது.
மதுரையை பொறுத்தமட்டில் பெத்தானியாபுரம், பரவை அருகே உள்ள பவர்ஹவுஸ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் நூற்றுக்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர் குடும்பத்தினர், காலங்காலமாக அகல் விளக்கு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் அகல்விளக்குகள் தரமாக இருப்பதால், பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த வியாபாரிகள் இங்கு வந்து ஆர்டர் கொடுத்து வாங்கி செல்கின்றனர்.
குறிப்பாக தென் மாவட்டங்களான விருதுநகர், நெல்லை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் அதிக அளவில் ஆர்டர் கொடுத்து வாங்கி செல்கின்றனர். இதனால் இப்பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் கடந்த 6 மாதமாக இடைவிடாது இரவும், பகலும் அகல்விளக்கு தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து மண்பாண்ட தொழிலாளி காளஸ்வரி கூறியதாவது:- மண்பாண்ட தொழிலில், முன்பு சக்கரத்தை பயன்படுத்தி வந்தோம். தற்போது களிமண்ணை பயன்படுத்தி, கிரைண்டர் மூலம் தயாரிக்கிறோம். ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை செய்கிறோம். இரவும், பகலும் வேலை செய்தால், ரூ.800 வரை கிடைக்கும். தற்போது அந்த அளவுக்கு வருமானம் கிடைப்பதில்லை. கண்மாயில் இருந்து களிமண் கொண்டு வர, ஒரு லோடுக்கு ரூ.500 முதல் ரூ.2 ஆயிரம் வரை கொடுக்க வேண்டியுள்ளது. மின்சார கட்டணமும் உயர்ந்துள்ளது. மூலப்பொருட்கள் விலையும் அதிகரித்துள்ளது. இருப்பினும், திருக்கார்த்திகையையொட்டி, ஏராளமான வியாபாரிகள் எங்களை நம்பி ஆர்டர் கொடுக்கின்றனர். இதற்காக அகல்விளக்கு தயாரிக்க அதிகமாக உழைக்கிறோம். ஆனால், உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைப்பதில்லை. ஆகவே, மண்பாண்ட தொழிலை பாதுகாக்க, இலவச மின்சாரம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில்களில் தீபம் ஏற்றுவதற்கும் அனுமதிக்க வேண்டும். அப்போது தான் எங்கள் தொழில் சிறப்பாக நடக்கும் என்றார்.
பெத்தானியாபுரத்தை சேர்ந்த மண்பாண்ட தொழிலாளி ஜோதி கூறும்போது, “அகல் விளக்கு தயாரிக்கும் தொழிலில் தற்போது போதிய வருமானம் கிடைப்பதில்லை. இதனால் அடுத்து வரும் தலைமுறையினர் இந்த தொழிலில் ஈடுபடுவதற்கு விரும்பம் இல்லாமல் இருக்கின்றனர். கிடைக்கின்ற மற்ற வேலைகளில் தங்களை ஈடுபடுத்தி கொள்கின்றனர். இந்த தொழிலை நசுங்காமல் பாதுகாக்க தொழிலாளர்களுக்கு அரசு பல்வேறு உதவிகளை செய்து கொடுக்க வேண்டும் என்றார்.
அகல்விளக்கு தயாரிக்கும் பழனிச்சாமி என்பவர் கூறும்போது, “நான் இதற்கு முன்பு சொந்தமாக மருந்து கடை வைத்திருந்தேன். அந்த தொழிலில் எனக்கு போதிய திருப்தி இல்லை. இதனால் நான் எனது குடும்ப தொழிலான அகல் விளக்கு தயாரிக்கும் தொழிலையே தற்போது செய்து வருகிறேன். இதில் அதிக அளவு வருமானம் கிடைக்கவில்லை என்றாலும் தொழிலை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக இந்த வேலையில் ஈடுபட்டு கொண்டிருக்கிறேன் என்றார்.
Related Tags :
Next Story