சேத்தியாத்தோப்பு அருகே: வீடுகளில் கருப்புக்கொடி கட்டி கிராம மக்கள் போராட்டம் - குவாரியில் மணல் எடுப்பதற்கு எதிர்ப்பு
சேத்தியாத்தோப்பு அருகே அரசு குவாரியில் மணல் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் கருப்புக்கொடி கட்டி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேத்தியாத்தோப்பு,
சேத்தியாத்தோப்பு அடுத்த சக்திவிளாகம் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கும், மிராளூர் பகுதிக்கும் இடையே உள்ள வெள்ளாற்றில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அரசு சார்பில் மணல் குவாரி தொடங்கப்பட்டது. இந்த குவாரியில் இருந்து தினந்தோறும் 500-க்கும் மேற்பட்ட லாரி, டிராக்டர் போன்ற வாகனங்களில் மணல் எடுத்து செல்லப்பட்டு, தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்களுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிகிறது. மேலும் இந்த குவாரியில் இருந்து அளவுக்கு அதிகமாக மணல் எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்த குவாரியில் மணல் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் பலமுறை போராட்டங்கள் நடத்தியும், அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், குவாரியில் மணல் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மணல் குவாரியை மூடக்கோரியும் தங்கள் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து சக்திவிளாகம் கிராம மக்கள் கூறுகையில், வெள்ளாற்று மணல் குவாரியில் அளவுக்கு அதிகமாக மணல் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் எங்கள் பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இப்பகுதியில் இயங்கி வரும் மணல் குவாரியை மூட வேண்டும். முதற்கட்டமாக எங்களது எதிர்ப்பை தெரிவிப்பதற்காக நாங்கள் கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இதன்பின்னரும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story