ஆணையருக்கு மிரட்டல் விடுத்தவர்களை கைதுசெய்யக்கோரி உழவர்கரை நகராட்சி ஊழியர்கள் போராட்டம்


ஆணையருக்கு மிரட்டல் விடுத்தவர்களை கைதுசெய்யக்கோரி உழவர்கரை நகராட்சி ஊழியர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 9 Nov 2018 5:17 AM IST (Updated: 9 Nov 2018 5:17 AM IST)
t-max-icont-min-icon

உழவர்கரை நகராட்சி ஆணையருக்கு மிரட்டல் விடுத்தவர்களை கைதுசெய்யக்கோரி நகராட்சி ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி,

உழவர்கரை நகராட்சி ஆணையராக பணிபுரிந்து வருபவர் கந்தசாமி. இவரை காலாப்பட்டு தொகுதி பிரச்சினைகள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரம் தனது ஆதரவாளர்களுடன் அலுவலகத்தில் நேற்று முன்தினம் சந்தித்து பேசியுள்ளார்.

அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆணையர் கந்தசாமிக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஆணையர் கந்தசாமி அளித்த புகாரின்பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரம் மற்றும் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தகவல் நகராட்சி ஊழியர்கள் மத்தியில் பரவியது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு ஆணையருக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி நகராட்சி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்றும் அவர்களது போராட்டம் நீடித்தது. காலையில் பணிக்கு வந்த அவர்கள் பணியை புறக்கணித்து கொட்டும் மழையில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆணையருக்கு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும், மிரட்டல் விடுத்தவர்களை உடனடியாக கைது செய்யவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினார்கள். ஊழியர்களின் போராட்டம் காரணமாக நேற்று பணிகள் பாதிக்கப்பட்டன.

Next Story