பாலத்தில் ஏற்பட்டுள்ள பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி


பாலத்தில் ஏற்பட்டுள்ள பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி
x
தினத்தந்தி 10 Nov 2018 4:30 AM IST (Updated: 9 Nov 2018 11:19 PM IST)
t-max-icont-min-icon

பாலத்தில் ஏற்பட்டுள்ள பள்ளத்தால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப் படுகின்றனர்.

கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம் கண்டிராதித்தம் மேட்டுத்தெரு கிராமத்தில் உள்ள காலனி தெரு பகுதியில் சாலையின் குறுக்கே கழிவுநீர் செல்லும் வகையில் பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பலத்தின் வழியாக தினமும் வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் பாலம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது பாலத்தின் இரு பகுதிகளும் உடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும் பாலத்தின் அடியில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் அந்த வழியாக சாக்கடை கழிவுநீர் செல்ல முடியாமல் அருகே குடியிருப்பு பகுதியில் குளம்போல் தேங்கி நிற்கிறது. கழிவுநீர் தேங்கி நிற்கும் இடத்தில் அடிபம்பு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த அடிபம்பில் தண்ணீர் பிடிக்க செல்லும் பொதுமக்கள் கழிவுநீரில் நின்றுகொண்டு தண்ணீர் பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பல நாட்களாக கழிவுநீர் தேங்கி நிற்பதால் அதில் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதியில் நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் பாலத்தில் ஏற்பட்டுள்ள பள்ளத்தால் 4 சக்கர வாகனங்கள் பாலத்தை கடந்து செல்லும் போது பெரிதும் சிரமம் ஏற்படுகிறது. இரவு நேரத்தில் நடந்து செல்பவர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள், சைக்கிளில் செல் பவர்கள் பாலத்தில் பள்ளம் இருப்பது தெரியாமல் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பாலத்தில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சரி செய்ய வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.

Next Story