தொப்பூர் அருகே சோகம்: குடிசையில் தீப்பிடித்து மூதாட்டி பலி அதிர்ச்சியில் கணவரும் சாவு
தொப்பூர் அருகே குடிசையில் தீப்பிடித்து மூதாட்டி பலியானார். மனைவி உடலை பார்த்ததும் அதிர்ச்சியில் கணவரும் இறந்தார்.
நல்லம்பள்ளி,
இந்த சோக சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே உள்ள சொரங்கப்பன்புதூரைச் சேர்ந்தவர் செல்லப்பெருமாள் (வயது 80). விவசாயி. இவருடைய மனைவி முனியம்மாள் (70).
2 பேரும் தங்களுக்கு சொந்தமான குடிசையில் வசித்து வந்தனர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. நேற்று முன்தினம் இரவு முனியம்மாள் குடிசையில் படுத்திருந்தார். செல்லப்பெருமாள் குடிசைக்கு வெளியே படுத்து தூங்கினார். நள்ளிரவு 2.30 மணியளவில் குடிசை தீப்பிடித்து எரிந்தது. இதனால் குடிசைக்குள் தூங்கிக்கொண்டிருந்த முனியம்மாள் தப்பிக்க வழியில்லாமல் சிக்கிக்கொண்டார். சிறிதுநேரத்தில் தீயில் கருகி முனியம்மாள் பரிதாபமாக இறந்தார்.
குடிசையில் தீப்பிடித்து எரிந்ததை அறிந்ததும் செல்லப்பெருமாள் படுக்கையில் இருந்து திடுக்கிட்டு எழுந்தார். குடிசை எரிவதை கண்டதும் பதறி துடித்தார். குடிசைக்குள் மனைவி சிக்கிக்கொண்டதை அறிந்து செல்லப்பெருமாள் கதறினார். அதிர்ச்சி அடைந்த அவர் சிறிதுநேரத்தில் பலியானார்.
இதுபற்றி சாமிசெட்டிப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தசாமி தொப்பூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். கணவன், மனைவி உடல்களை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, குடிசையில் தீப்பிடிக்க காரணம் என்ன? என்பது பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story