கடனுக்கு டி.வி. வாங்கியதால் கணவருடன் தகராறு: பெண் தூக்குப்போட்டு தற்கொலை பரமத்தி வேலூர் அருகே சோகம்
பரமத்திவேலூர் அருகே கடனுக்கு டி.வி. வாங்கியதால் கணவருடன் தகராறில் ஈடுபட்ட பெண், மனம் உடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பரமத்திவேலூர்,
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பட்டணம் பகுதியை சேர்ந்தவர் காமராஜ் (வயது 32). இவர் ராசிபுரத்தில் உள்ள சத்துமாவு தயாரிக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாளராக வேலை செய்து வருகிறார்.
இவருக்கும், பரமத்தி வேலூர் அருகே உள்ள பில்லூர் கிராமத்தை சேர்ந்த கனிமொழிக்கும்(30) கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. காமராஜ், திருமணம் ஆன பிறகு, பில்லூரில் உள்ள தனது மாமனார் வீட்டிலேயே தங்கி வேலைக்கு சென்று வந்துள்ளார்.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி அவருக்கு வேலை பார்க்கும் நிறுவனம் சார்பில் ரூ.5 ஆயிரம் போனஸ் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த பணத்தை முன்தொகையாக கொடுத்து, ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள எல்.இ.டி. டி.வி. மற்றும் ஹோம் தியேட்டரை கடை ஒன்றில் கடனுக்கு வாங்கி வீட்டுக்கு கொண்டு சென்றுள்ளார்
ஏற்கனவே கடன் இருக்கும் சூழலில், மீண்டும் கடன் பெற்று அதில் டி.வி. வாங்க வேண்டுமா? எப்படி குடும்பம் நடத்துவது? என்று கூறி கணவருடன், மனைவி கனிமொழி வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் டி.வி. மற்றும் ஹோம் தியேட்டரை வாங்கிய கடையில் திரும்ப கொடுத்து விட்டு வரும்படி கனிமொழி கணவருடன் கூறி உள்ளார். ஆனால் அதை கடையில் திரும்ப பெற மாட்டார்கள் என்று கணவர் கூறி உள்ளார்.
இதனால் மனம் உடைந்து காணப்பட்ட கனிமொழி நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் விட்டத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனிடையே வெளியே சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிய கணவர் காமராஜ், மனைவி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து அவர் பரமத்தி போலீசில் புகார் செய்தார். தகவல் அறிந்து வந்த போலீசார், கனிமொழியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருமணம் ஆகி 5 ஆண்டுகளே ஆவதால், கனிமொழியின் தற்கொலை குறித்து, திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் பாஸ்கரனும் விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story