தர்மபுரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம்: ‘மக்களை விலைக்கு வாங்க நினைக்கும் அரசியல்வாதிகள் வெற்றி பெறக்கூடாது’ கமல்ஹாசன் பேச்சு


தர்மபுரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம்: ‘மக்களை விலைக்கு வாங்க நினைக்கும் அரசியல்வாதிகள் வெற்றி பெறக்கூடாது’ கமல்ஹாசன் பேச்சு
x
தினத்தந்தி 9 Nov 2018 11:30 PM GMT (Updated: 9 Nov 2018 6:19 PM GMT)

மக்களை விலைக்கு வாங்க நினைக்கும் அரசியல்வாதிகள் வெற்றி பெறக்கூடாது என்று தர்மபுரி மாவட்ட சுற்றுப்பயணத்தில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் பேசினார்.

தர்மபுரி,

மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் மக்களுடனான பயணம் என தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டத்தில் நேற்று கமல்ஹாசன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பஸ் நிறுத்தத்தில் தனது பயணத்தை தொடங்கிய அவர், பாப்பாரப்பட்டி, பாலக்கோடு, காரிமங்கலம், பெரியாம்பட்டி ஆகிய இடங்களில் மக்களை சந்தித்து பேசினார். அப்போது அங்கு திரண்டிருந்த மக்கள் மத்தியில் கமல்ஹாசன் பேசும் போது கூறியதாவது:-

பொதுவாக உங்கள் பகுதியில் தேர்தல் நேரம் வந்தால் அரசியல் கட்சியினர் வருவார்கள். ஆனால் நாங்கள் அப்படி அல்ல. உங்களுடைய அடிப்படை தேவைகள் என்ன? என்பதை அறிந்து கொண்டு இங்கு வந்துள்ளோம். உங்களில் ஒருவராக இருந்த எங்களுக்கு ஏற்பட்ட கோபத்தின் வெளிப்பாடாக இப்போது அரசியலுக்கு வந்துள்ளோம். நல்லம்பள்ளி பகுதியில் அரசு பள்ளிகள் போதிய அளவில் இருக்கிறதோ, இல்லையோ, டாஸ்மாக் மதுக்கடைகள் அதிகமாகவே இருக்கின்றன. தமிழகத்தில் அரை நூற்றாண்டு கால சாதனையாக சாராயம் ஆறாக ஓடுகிறது. மதுக்கடைகளை ஒருநாளில் முழுமையாக மூடிவிட முடியாது. அதற்கு இன்னும் ஒரு தலைமுறை ஆகும். ஓட்டு என்பது அனைவருக்கும் முக்கியமான ஒன்று. உங்கள் ஓட்டுகளை 5-க்கும் 10-க்கும் விற்றுவிடக்கூடாது. அவ்வாறு செய்தால் ஒரு சமுதாயமே அழியும் நிலை ஏற்படும்.

ஓட்டுரிமையின் அடிப்படையை உணர்ந்து தேர்தல்களில் தவறாமல் வாக்களித்து நல்லவர்களை உங்கள் பிரதிநிதிகளாக தேர்வு செய்ய வேண்டும். தற்போது அரசு செய்ய வேண்டிய வேலைகளை தனியாரும், தனியார் செய்ய வேண்டிய வேலைகளை அரசும் செய்துகொண்டிருப்பது அநியாயமாகும். சில ஆயிரம் ரூபாய்களை கொடுத்து 5 ஆண்டுகளுக்கு மக்களை விலைக்கு வாங்கி விடலாம் என்று நினைக்கும் அரசியல்வாதிகள் வெற்றி பெற்றுவிடக்கூடாது.

எங்கள் நற்பணி மன்றம் சார்பில் பாப்பாரப்பட்டியில் பள்ளி ஒன்றை கட்டிக்கொடுத்து உள்ளோம். இனிமேல் எனது எஞ்சிய வாழ்நாளை மக்களுக்காக அர்ப்பணிக்க முடிவு செய்து இங்கு வந்துள்ளேன்.

பாப்பாரப்பட்டி என்றால் சந்தனகடத்தல் வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்ட இடம் என்பது நினைவுக்கு வருவதை விட இங்கு பாரதமாதா கோவில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கைதான் முன்னால் நிற்கிறது. நீங்கள் ஒவ்வொருவரும் நினைத்தால் உங்கள் இல்லமே பாரதமாதா கோவில்தான்.

பாலக்கோடு பகுதியில் 200-க்கும் மேற்பட்டோருக்கு மர்ம காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக அறிகிறேன். மக்கள் நீதி மய்யம் இங்கு உடனடியாக மருத்துவ முகாமை அமைக்கும். பாலக்கோடு அருகே தொட்டுவிடும் தூரத்தில் ஒரு ஆறு ஓடிக்கொண்டிருக்கிறது. இதை கவனிக்க வேண்டிய அரசாங்கம் வேறு விளையாட்டை விளையாடி கொண்டிருக்கிறது. இதையெல்லாம் மாற்றி அமைக்க வேண்டிய கடமை உங்களுடன் சேர்ந்து எனக்கும் இருக்கிறது. ஓட்டுக்கு காசு கொடுப்பவர்களின் கைகளை தட்டிவிட்டு எங்கள் கைகளுடன் நீங்கள் இணைய வேண்டும். மாற்றத்தை மக்களால் மட்டுமே முன்னெடுக்க முடியும். எனவே நீங்கள் சரியான முடிவை எடுத்தால் நாளை நமதே.

இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

முன்னதாக நேற்று காலை சென்னையில் இருந்து விமானத்தில் சேலம் வந்த கமல்ஹாசன், அங்கிருந்து காரில் புறப்பட்டு தர்மபுரி வந்தார். அவருக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். நிகழ்ச்சியில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் டி.ராஜசேகர், மாவட்ட பொறுப்பாளர்கள் கமல்பாலா, சத்யநாராயணா, முருகேசன், வடிவேல், தங்கவேலு, நிர்வாகிகள் சோலார் விஜய், ரவிச்சந்திரன், சரவணகுமார், நாகராஜ், பிரதீப்குமார், ஜெயவெங்கடேசன், பாலன், சங்கர், எழிலரசன் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

நேற்று இரவு தர்மபுரியில் தங்கிய கமல்ஹாசன் இன்று (சனிக்கிழமை) கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார். இன்று மாலை தர்மபுரி மாவட்டம் அரூரில் ரவுண்டானா அருகில் சுற்றுப்பயணத்தை தொடங்கும் அவர், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, மத்தூர், பர்கூர், கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை, ஓசூர் ஆகிய இடங்களில் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து பேசுகிறார்.

Next Story