ஆண்டிப்பட்டியில்: பன்றிக்காய்ச்சலுக்கு பெண் பலி


ஆண்டிப்பட்டியில்: பன்றிக்காய்ச்சலுக்கு பெண் பலி
x
தினத்தந்தி 9 Nov 2018 10:15 PM GMT (Updated: 9 Nov 2018 6:55 PM GMT)

பன்றிக்காய்ச்சலுக்கு ஆண்டிப்பட்டியை சேர்ந்த பெண் பலியானார்.

ஆண்டிப்பட்டி, 

ஆண்டிப்பட்டி கீழ ஓடைத்தெருவை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மனைவி மல்லிகாதேவி (வயது 55). இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றார். எனினும் பலன் இல்லாததால், தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அப்போது பரிசோதனை செய்த டாக்டர்கள் அவருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பதை உறுதி செய்தனர்.

அதையொட்டி அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலன் இன்றி நேற்று முன்தினம் இரவு மல்லிகாதேவி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் கூறியதாவது:-

பன்றிக்காய்ச்சலால் பாதிப்படைந்த மல்லிகாதேவிக்கு தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலன் இன்றி அவர் இறந்து போனார். அவரது உடல் பாதுகாப்புடன் சுடுகாட்டில் எரிக்கப்பட்டது. அவருடன் இருந்தவர்களின் ரத்தமாதிரி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, பன்றிக்காய்ச்சல் பரவாமல் இருக்க தடுப்பு மாத்திரைகள் கொடுக்கப்பட்டுள்ளது. பன்றிக்காய்ச்சல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். பொதுவாக மற்றவர்களுடன் கை குலுக்குவதை தவிர்த்தல் வேண்டும். உணவு உண்பதற்கு முன்பு கை, கால், முகத்தை சுத்தமாக கழுவிக்கொள்ள வேண்டும். காய்ச்சலால் பாதிப்படைந்தவர்களை பார்க்க செல்லும்போது பாதுகாப்புடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆண்டிப்பட்டியில் பன்றிக்காய்ச்சலுக்கு பெண் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மல்லிகாதேவி வசித்து வந்த பகுதியில் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டது.


Next Story